வீராங்கனைகளுக்கான முழு உதவியையும் அரசு செய்யும்: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி

ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக கலந்துரையாடினார்.
ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக கலந்துரையாடினார்.
Updated on
1 min read

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பெண்களுக்கான முழு உதவியையும் அரசு செய்யும் என்று ஜப்பான் சென்றுள்ள தமிழக ஒலிம்பிக் வீரர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக உரையாடினார். இதில், பவானிதேவி - வாள் சண்டை, சரத்கமல் - மேஜை பந்து, பாய்மரப் படகு - நேத்ரா குமணன், கணபதி, வருண், தொடர் ஓட்டம்-ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, தனலட்சுமி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், மாற்றுத் திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் - மாரியப்பன் தங்கவேலு ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது முதல்வர் பேசியதாவது: உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க உள்ளீர்கள் என்பதை நினைக்கும்போதே எனக்கு பெருமையாக உள்ளது. நீங்கள் வெற்றிப் பதக்கங்களுடன் தமிழகம் வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

உங்களில் பலருக்கும் வறுமைசூழ்ந்த வாழ்க்கையாக இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகள் மீது உங்களுக்கு இருந்த ஆர்வமும் உங்கள் திறமை மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையும்தான் உங்களை இந்த இடத்துக்கு அழைத்து வந்துள்ளது. ஷூ வாங்கபணமில்லாமல், உரிய ஊட்டச்சத்து உணவுகள் கூட கிடைக்காமல் சிலர் பயிற்சி பெற்று வந்துள்ளீர்கள். இத்தகைய பொருளாதார தடைகள் இனி இல்லாதவாறு அரசு பார்த்துக் கொள்ளும்.

விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெறத் தேவையான பொருட்கள், தரமான உணவு, உறைவிடம் உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். குறிப்பாக விளையாட்டுப்போட்டிகளில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கெடுக்கின்றனர். அவர்களுக்கான முழு உதவியையும் அரசு செய்யும். ஒலிம்பிக் தடகள அணியில் 26 பேரில் 5 பேர் தமிழர்கள். இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை. அடுத்தடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் ஏராளமாக பங்கேற்கும் சூழலை அரசு ஏற்படுத்தித் தரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், துறைச் செயலர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in