Published : 17 Jul 2021 03:13 AM
Last Updated : 17 Jul 2021 03:13 AM

உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தால் குண்டர் சட்டத்தில் கைது: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

உரிமம் இன்றி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்போர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்தார்.

கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ‘பெண்கள் உதவி மையம்’ தொடங்கப்பட்டது. இதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார்கள் கிடைத்தவுடன், உடனடியாக களத்துக்குச் சென்று விசாரிக்க, ஒவ்வொரு காவல் நிலையத்திலும், தலா இரண்டு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், பெண்கள் உதவி மையத்தைச் சேர்ந்த காவலர்களுக்கு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, அது தொடர்பான வழக்குகளை எவ்வாறு விசாரிப்பது, மற்ற அரசு துறைகளின் பங்களிப்பு என்ன? என்பது குறித்து விளக்கும் கருத்தரங்கு கோவையில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் முகாமைத் தொடங்கிவைத்து பேசினார்.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், குழந்தைகள் நல அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 181 மற்றும் 1098 ஆகிய எண்களின் போஸ்டர்களை காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டனர்.

பின்னர், காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அவுட்டுக்காய் போன்ற வெடி பொருட்களை தயாரிப்பவர்கள், உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். மாவட்டத்தில், ஆயுத கலாச்சாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, உரிமம் இல்லாத 13 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தகுந்த உரிமம் இல்லாமல், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x