

குளக் கரையில் இருந்த கோயில்கள் இடிக்கப்பட்ட விவகாரத்தில், மாநகராட்சியை கண்டித்து கோவையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் 616 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கோவை மாநகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றி வருகின்றனர். கடந்த 13-ம் தேதி முத்தண்ணன் குளக் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றும்போது, அங்கிருந்த 9 கோயில்களும் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி அமைப்பினர், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஜூலை 16-ல் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி, மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தலைமையில் மாநில செயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார், மாவட்ட தலைவர் தசரதன், செய்தி தொடர்பாளர் தனபால், கோட்ட செயலாளர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான இந்து முன்னணியினர், கோவை டவுன்ஹால் பகுதியில் திரண்டு, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். மணிக்கூண்டு அருகே அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 616 பேரை கைது செய்தனர்.
அப்போது போலீஸாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
எஸ்டிபிஐ அமைப்பினர் கைது
இந்து முன்னணியினரின் போராட்டத்தையொட்டி, டவுன்ஹால் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். காவல் ஆணையர் தீபக் தாமோர், சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அங்கு முகாமிட்டனர். மணிக்கூண்டு பகுதியில் வாகனங்கள் செல்ல இயலாத வகையில் அனைத்து பாதைகளும் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டன.
தீயணைப்பு வாகனங்கள், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனங்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் டவுன்ஹால் பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.