

தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லாத போது எதற்கு உள் கட்சித் தேர்தல். இந்த விஷயத்தில் ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை சத்யசாய் நகரில் உள்ள தயா மகாலில், தனது ஆதரவாளர் களிடம் திங்கள்கிழமை கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினார் மு.க. அழகிரி. சுமார் 3 மணி நேரம் நடை பெற்ற இந்தக் கூட்ட நிறைவில் மு.க.அழகிரி பேசியதாவது:
பணம் வாங்கிக் கொடுப்பவர்கள் தான் இங்கே மாவட்டச் செயலர் கள். இந்த விஷயத்துல நான் ஜெயலலிதாவைப் பாராட்டுகிறேன். வருஷத்துக்கு ஒரு மாவட்டச் செயலாளர். எதுக்கு தேர்தல்? கட்சியில் ஜனநாயகம் இல்லாதபோது தேர்தலும் தேவையில்லை.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியினர் இங்க வந்திருக்காங்க. அவர்களுடைய கருத்துகளையும் நான் கேட்டிருக்கிறேன். இதுதான் முதல் கூட்டம். இதுபோல தென்மாவட்டங்களிலும் மற்ற மாவட்டங்களிலும் கருத்துகளைக் கேட்ட பிறகுதான் எந்த முடிவையும் நான் அறிவிக்க முடியும்.
பணம் கொடுத்தால் சீட்
கட்சியையே சேராதவர்கள், பணம் கொடுத்து சீட் வாங்கியவர் கள், நாளைக்கே வேறு கட்சிக்குத் தாவுபவர்களுக்கு எல்லாம் திமுக.வில் சீட் கொடுத்துள்ளனர். தலைவரால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப் படவில்லை என்பதை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சியிலேயே இல்லாதவர்கள்தான் வேட்பாளர்களாக ஆகியிருக்கிறார்கள். இங்கே பேசியவர்கள்கூட சொன்னார் கள், விருதுநகர் வேட்பாளராகி இருக்கும் ரத்தினவேலு, அதிமுகவைச் சேர்ந்த மேயருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்ததோடு திமுக.வை மறைமுகமாகத் தாக்கி அறிக்கை வெளியிட்டவர்.
இவரைப் போன்றவர்களை வேட் பாளராகப் போட்டால் எப்படி கட்சியைக் காப்பாற்ற முடியும்? இதேபோலத்தான் மீதியுள்ள வேட்பாளர்களும். நெல்லை வேட் பாளராக அறிவிக்கப்பட்டவர் திருச்செந்தூரில் கஞ்சா கடத்தியவர். ராமநாதபுரம் வேட்பாளர் கல்லூரி நிர்வாகி முகம்மது ஜலீல் என்பவருக்கும், கட்சிக்கும் சம்பந்தமே கிடையாது. தேனி வேட்பாளர் ஒரு வேட்பாளரா? அவர் ஜெயிப்பாரு. ஆனா ஆதாயம் காட்டினா நாலாவது நாளே அதிமுக பக்கம் போயிருவாரு. அவர் எலெக்ஷனுக்காக நிற்கல. கலெக்ஷனுக்காக நிற்கிறாரு.
இதுவா வேட்பாளர் தேர்வு?
நேர்காணலில் என்ன கேட் கணும்? முதல்ல எனக்கு எவ்வளவு கொடுப்பன்னு கேட்டுட்டு, அதுக்கு அப்புறம் தேர்தல்ல எவ்வளவு செலவழிப்பன்னு கேட்கிறாங்க. இப்படித்தான் வேட்பாளர் தேர்வு நடந்திருக்குது.
தலைவரிடம் துணிச்சலாக கேள்வி கேட்பவனும் நான்தான். அவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் தட்டிக் கேட்பவனும் நான் தான். கலைஞரிடம் கேள்வி கேட்ட தற்காக என்னை நீக்கியிருக்கிறீர்களே? வேலூர் தொகுதியில் தோழமைக் கட்சி வேட்பாளரிடம் துரைமுருகனின் ஆட்கள் பிரச்சினை செய்திருக்கிறார்கள். துரைமுருகன் தூண்டுதலின் பேரில்தான் இது நடந்திருக்கு. அவர் மேலே ஏன் நடவடிக்கை எடுக்கல? அதான் இங்கு ஜனநாய கம் இல்லை என்று சொல்கிறேன்.
35 வேட்பாளர்களையும் மாற்றணும்
வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டபோது தலைவர் கடைசியா ஒன்னு சொல்லியிருக் காரு. இந்தப் பட்டியல் இறுதி யானது அல்ல. வேட்பாளர்களை மாற்றினாலும் மாற்றுவோம் என்று. அதன்படி 35 வேட்பாளர்களையும் மாற்றினால்தான் நாம் வெற்றி பெற முடியும். இல்லையேல் கடினம்.
தனி கட்சி தொடங்குவது பற்றி இப்போது நான் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. இன்னும் பல ஊர்களுக்குப் போகப் போகிறேன். அவர்களின் கருத்தையும் கேட்டுவிட்டு, அவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என மனதில் வாங்கிக்கிட்டு அப்புறம்தான் எந்த முடிவையும் எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.