

சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளில் தொய்வு இருந்தால், தொடர்புடைய ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி மழைநீர் வடிகால் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பராமரித்து வரும் 2,071 கிமீ நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கிமீ நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 3 ஒப்பந்ததாரர்கள், குறித்த காலத்துக்குள் பணிகளை மேற்கொள்ளாமல் காலதாமதம் செய்து வந்தது ஆய்வுக்கூட்டத்தில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் பணிகளில் தொய்வு இருப்பின் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.