

மறைமலை அடிகள் தனது கருத்தை ஆணித்தரமாக துணிந்து வெளிப்படுத்தக் கூடியவர். அடிகளாரின் ஆற்றலை தமிழர் அனைவரும் பெற வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று தமிழியக்கத்தின் நிறுவனர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழியக்கம் சார்பில் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என போற்றப்படும் மறைமலை அடிகளின் 146-வது பிறந்தநாள் விழா, மெய்நிகர் கூட்டமாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் தமிழியக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவரும், விஐடி வேந்தருமான கோ. விசுவநாதன் பங்கேற்று பேசியதாவது:
தமிழ்நாட்டில் அதிகமானோர் மறைமலை அடிகளாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவர் தனித்தமிழ் இயக்கம் தொடங்கிய 102-வது ஆண்டில் தமிழியக்கம் தொடங்கினோம். 74 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மறைமலை அடிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு தனித்தமிழ் இயக்கத் தொண்டாற்றினார். மறைமலை அடிகள் நம்மோடு இல்லையென்றாலும் அவர்தம் எண்ணங்களால் என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மறைமலை அடிகள் கல்லூரி ஆசிரியராக இருக்கும்போது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாக்கி, சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்கினர். அதை எதிர்த்துதான் அடிகளார் ஆசிரியர் பணியைத் துறந்தார். தனது கருத்தை ஆணித்தரமாக துணிந்து வெளிப்படுத்தும் அடிகளாரின் ஆற்றலை தமிழர் அனைவரும் பெற வேண்டுமென நான் பெரிதும் விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மறைமலை அடிகளின் குடும்ப வாரிசுகளான சாரதா நம்பி ஆரூரன், மறை திரு. தாயுமானவன், தமிழியக்க மாநிலச் செயலர் மு. சுகுமார், பொதுச் செயலாளர் கவியருவி அப்துல்காதர், பொருளாளர் வே.பதுமனார், தென் சென்னை மாவட்டச் செயலர் க.சங்கர், கவிஞர் முயற்சி முருகேசன், ஆகியோர் கலந்துகொண்டனர்.