

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடியில் அமைக்கப்பட்ட அதிநவீன ஆக்சிஜன் தயாரிக்கும் மையம் திறக்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து செயின்ட் கோபெய்ன் நிறுவனம் பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து நிறுவியுள்ள ரூ.2 கோடி மதிப்பிலான அதிநவீன மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கிவைத்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் ஜெயந்தி, பிரான்ஸ் தூதர் ஜெனரல் லிஸ் டால்பட் பரீ ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் நலவாழ்வு மையங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
கரோனாவில் இருந்து குணமடைந்த பின் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்த நலவாழ்வு மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நலவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. உடல் திறனை கண்டறிய 6 நிமிட நடைப்பயிற்சி, யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
செயின்ட் கோபெய்ன் (Saint Gobain) நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி (சிஎஸ்ஆர்) ரூ.2 கோடி செலவில் இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் ஜெனரேட்டர் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் ஜெனரேட்டர் இங்குள்ள படுக்கைகளுக்கு ஆக்சிஜனை வழங்குவது மட்டுமில்லாமல் சிலிண்டர்களில் ஆக்சிஜனை நிரப்பி வேறு மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்ல முடியும். அந்த அளவுக்கு நவீன வசதிகளை கொண்டது. மேலும், ரூ.3 கோடி செலவில் இங்கும், பெருந்துறை, காஞ்சிபுரம், திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளிலும் பல்வேறு மருத்துவ வசதிகளை செயின்ட் கோபெய்ன் நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை இந்த மருத்துவமனையில் 47,012 பேர் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்றுள்ளனர். கரோனாவை கண்டறியும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மட்டும் 3 லட்சத்து 36,829, சிடி ஸ்கேன் 29,700, எக்ஸ்ரே 21,935 எடுத்து மிகப்பெரிய சாதனையை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செய்துள்ளது.
ஜியோ இந்தியா பவுண்டேஷன் நிறுவனம் 15 லட்சம் லிட்டர் கிருமி நாசினி திரவத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் 70 இடங்களில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இதில் 32 இடங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொன்றும் சுமார் ரூ.2 கோடி செலவில் அமைகிறது என்றார்.