

ஊதிய உயர்வு தரக்கோரி மருத்துவமனை பல்நோக்கு ஊழியர்கள் ஆளுநரிடம் முறையிட்டனர்.
கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் பிராணவாயு வசதி கொண்ட தற்காலிக கரோனா சிகிச்சை மையத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை திறந்து வைத்தார்.
தொற்று கண்டறியப்பட்டவர்கள் கரோனா சிகிச்சை மையத்தை அடைவதற்கு முன்பாக பிராணவாயு வழங்கப்படும் நிகழ்வினை செய்முறை மூலமாக மருத்துவர்கள் நிகழ்த்திக் காட்டியதை ஆளுநர் பார்வையிட்டார்.
அப்போது மருத்துவமனையில் பணியாற்றும் பல்நோக்கு ஊழியர்கள் ஆளுநரிடம் கூறுகையில், “8 முதல் 13 ஆண்டுகள் வரை மருத்துவமனையில் பணிபுரிகிறோம். அதிகப்பட்சமாக எங்களுக்கு ரூ.6,500 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. எங்களில் பெரும்பாலானோர் கணவரால் கைவிடப்பட்டவர்கள். கருணை அடிப்படையில் தான் பணி வழங்கப்பட்டது. கரோனா காலத்தில் உயிரை துச்சமாக மதித்து நாங்கள் பணியாற்றினோம். எங்கள் ஊழியர்களில் 4 பேர் கரோனாவால் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்த வித இழப்பீட்டு தொகையும் கிடைக்கவில்லை. குறைந்த வருமானத்தால் எங்களால் குடும்பம் நடத்த முடியவில்லை. பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி சிக்கித் தவிக்கிறோம். எங்களுக்கு பணி நிரந்தரம் அல்லது சம்பள உயர்வாவது வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரமாவது சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அதிகாரிகளுடன் கலந்துபேசி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி கூறி அங்கிருந்து புறப்பட்டார்.