புதுவை அரசு மருத்துவமனையில் கரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த இதய அறுவை சிகிச்சை இன்று முதல் மீண்டும் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுவை அரசு மருத்துவமனையில் கரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த இதய அறுவை சிகிச்சை இன்று முதல் மீண்டும் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
Updated on
1 min read

கரோனா தொற்றால் இரண்டுஆண்டுகளாக நிறுத்தப் பட்டிருந்த இதய அறுவை சிகிச்சை இன்றுமுதல் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்படுகிறது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ப்ரண்டியர் லைப் லைன் மருத்துவமனையுடன் இணைந்து இதய அறுவை சிகிச்சை துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் 234 இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டன. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இதய அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த அறுவை சிகிச்சைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ப்ரண்டியர் லைப் லைன் மருத்துவமனை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மீண்டும் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் நேற்று மாலை கையெழுத்தானது.

ப்ரண்டியர் லைப் லைன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் செரியன், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அருண் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.

இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமி கூறுகையில், “கரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு 3 பேருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதுவரை 234 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிகிச்சைகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஒரு வாரத்துக்கு 6 முதல் 10 பேருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

புதுச்சேரியில் உள்ள மருத்துவர்களும், சென்னையிலுள்ள மருத்துவர்களும் காணொலி மூலம் பேசி, நோயாளிகளுக்கு எந்த முறையில் அறுவை சிகிச்சை செய்வது என ஆலோசனை செய்யப்படும். இதன்மூலம் ஏழை எளிய மக்கள் சென்னை செல்லாமலே புதுச்சேரியில் தரமான இதய சிகிச்சை பெற முடியும். சுகாதாரத்துறை மூலம் புதுச்சேரியில் மக்களுக்கு தரமான சுகாதாரமான சிகிச்சை அரசு அளித்து வருகிறது. இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

மருத்துவத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “நோயாளிகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்படும். அதற்கான தொகையை அரசு செலுத்தும். முதல்கட்டமாக இன்று மூவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது” என்று குறிப்பிட்டனர்.

ஒரு வாரத்திற்கு 3 பேருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதுவரை 234 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in