

தூத்துக்குடியில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நலவாரிய அட்டை, ஜாதி சான்றிதழ் என எதுவுமே இல்லாமல் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர் 25 நரிக்குறவர் குடும்பத்தினர். இதனால், அரசின் எந்த திட்டமும், சலுகைகளும் இவர்களைப் போய்ச் சேரவில்லை.
தூத்துக்குடியில் கோரம்பள்ளம், ராஜாஜி பூங்கா, 2-ம் கேட் ஆகிய இடங்களில் இருந்து அடுத்தடுத்து விரட்டப்பட்ட இவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே வசிக்கின்றனர். இக்குடும்பங்களில் உள்ள 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் யாரும் பள்ளிக்குச் செல்லவில்லை.
திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நரிக்குறவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை வழங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் உள்ள இவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என தங்களின் மனக்குமுறலை கொட்டுகின்றனர்.
எந்த அடையாளமும் இல்லை
இங்கு வசித்து வரும் அ.மகேஸ்வரி (45) கூறும்போது, “40 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் தூத்துக்குடியில்தான் வசிக்கிறோம். எனக்கு பேரன் பேத்திகள் உள்ளனர். எங்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை, ஜாதி சான்றிதழ் என எதுவும் கிடையாது. இதனால் அரசின் எந்த சலுகைகளும், திட்டங்களும் எங்களுக்கு கிடையாது.
ஜாதி சான்றிதழ் இல்லாததால் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியவில்லை. மேலும், எங்களுக்கென நிரந்தர இடம் இல்லை. நிரந்தர முகவரி இல்லை. திடீரென அதிகாரிகள் விரட்டிவிடுவார்களோ என்ற அச்சம் இருக்கிறது” என்றார் அவர்.
வெள்ளத்தில் தத்தளித்தோம்
இங்கு வசிக்கும் குமார் (29) என்ற இளைஞர் கூறும்போது, “கடந்த நவம்பர், டிசம்பர் ஆகிய இரு மாதங்களும் மழை வெள்ளத்தில் தத்தளித்தோம். சில அமைப்புகள் தான் எங்களுக்கு நிவாரணப் பொருட்களை அளித்தன. ஒரு தொண்டு நிறுவனம் எங்கள் கூடாரங்களில் மரப்பலகை மூலம் மேடை போன்று அமைத்து தந்துள்ளனர்.
எங்களுக்கு நிரந்தரமாக ஒரு இடத்தை அரசு ஒதுக்கித்தர வேண்டும். மேலும், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வழங்கி எங்களையும் சமுதாயத்தில் மனிதர்களாக வாழ அரசு உதவி செய்ய வேண்டும்” என்றார் அவர்.
சமூக அடையாளம்
இதுதொடர்பாக அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணை ப்பாளர் மா.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “இன்றைய சூழ்நிலையில் பலரும் இயற்கையை சுரண்டி வாழும் நிலையில், இவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள். அவர்களுக்கான சமூக அடையாளத்தை அரசு அளிக்காதது வேதனைக்குரிய விஷயம். நரிக்குறவர்களுக்கு தனி நலவாரியம் இருந்த போதிலும் ஜாதி சான்றிதழ் இல்லாததால் அவர்களால் அதில் சேர முடியவில்லை’ என்றார் அவர்.
இவர்களுக்கான உரிமைகளை மீட்டுத்தர அதிகாரிகள் முன் வருவார்களா?