

கேரளாவில் ரூ.250 கோடியில் கரோனா தடுப்பூசி உற்பத்தி மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக் கழக இயக்குநர் ஜி.ராஜமாணிக்கம் தெரிவித்தார்.
மதுரை கோ.புதூரில் நேத்ராவதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. இம்மருத்துவமனையை மதுரை திருவாதவூரைச் சேர்ந்த வரும் கேரளா மாநில தொழில் வளர்ச்சிக் கழக இயக்குநருமான ஜி.ராஜமாணிக்கம் திறந்து வைத்தார். பத்தனம்திட்டா மாவட்ட எஸ்.பி ஆர்.நிஷாந்தினி, மருத்துவர்கள் ஏ.ஹரிஹரன், ஆர்.வசுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை மருத்துவர் பாலகுருசாமி செய்திருந்தார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.ராஜ மாணிக்கம் கூறுகையில், தமிழகத்தைப் போல் கேரளாவிலும் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. எனவே, திருவனந்தபுரத்தில் உள்ள தொழில் வளர்ச்சிக் கழகப் பூங்காவில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும் 85,000 சதுர அடி கட்டிடத்தில் தடுப்பூசி தயாரிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. அந்த இடத்தில் ரூ.250 கோடி செலவில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு, அந்த மையத்தில் தடுப்பூசி தயாரிப்பு பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கேரளாவில் தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். மேலும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படும். கரோனா தடுப்பூசிக்கான தேவை குறைந்ததும், அந்த மையத்தில் தொழில் வளர்ச்சித் துறையும், மருத்துவ ஆராய்ச்சித் துறையும் இணைந்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை சலுகை விலையில் தயாரித்து வழங்க திட்டமிட்டுள் ளோம் என்று கூறினார்.