சென்னையில் கால்நடை பல்கலை. பட்டமளிப்பு விழா: 32 பதக்கங்கள் குவித்து மாணவி லாவண்யா சாதனை

சென்னையில் கால்நடை பல்கலை. பட்டமளிப்பு விழா: 32 பதக்கங்கள் குவித்து மாணவி லாவண்யா சாதனை
Updated on
2 min read

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், இளநிலை கால்நடை மருத்துவம் பயின்ற லாவண்யா என்ற மாணவி 32 பதக்கங்களைக் குவித்து பாராட்டுகளைப் பெற்றார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவித்தார். தமிழக கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் டிகேஎம் சின்னையா கலந்துகொண்டார். பல்கலைக்கழக துணைவேந்தர் சு.திலகர் ஆண்டறிக்கை வாசித்தார்.

இளநிலை, முதுநிலை, முனை வர், உணவு தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் படிப்பை நிறைவு செய்த 513 பட்டதாரிகளில் 309 பேர் விழாவில் கலந்துகொண்டு பட்டங்கள் பெற்றனர். 204 பேர் அஞ்சல் மூலமாக பட்டங்கள் பெற உள்ளனர். சிறப்பிடம் பெற்ற பட்டதாரிகளில் 41 பேருக்கு பதக்கங் கள், விருதுகள் வழங்கப்பட்டன. இளநிலை கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு பிரிவில் பயின்ற லாவண்யா என்ற மாணவி 32 பதக்கங்களைக் குவித்து அனை வரது பாராட்டையும் பெற்றார்.

விழாவில் மத்திய அரசின் கால் நடை பராமரிப்புத் துறை ஆணையர் சுரேஷ் ஷி.ஹோனப்பகோல் பேசியதாவது:

ஊட்டச்சத்தையும் உணவுப் பாதுகாப்பையும் நமக்கு வழங்கும் சொத்துகள்தான் கால்நடைகள். கால்நடை வளத்தில் 75 சதவீதம் விவசாயிகளின் பங்கு உள்ளது. விவசாயம் பொய்த்துப் போவது, இயற்கைப் பேரிடர் காரணமாக ஏற்படும் இழப்பை சரிசெய்யும் நடமாடும் வங்கிகளாக கால்நடை கள் விவசாயிகளுக்கு கைகொடுக் கின்றன. நாட்டில் 2-ம் நிலை வரு வாய் அளிக்கும் தொழிலாக கால் நடை வளர்ப்பு உள்ளது.

கால்நடை பராமரிப்பு, கோழிப் பண்ணைத் தொழிலில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இத்துறை யில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களால் கிராமப்புற வறுமை பெருமளவு குறைந்துள்ளது. இதனால் பலருக்கு வேலைவாய்ப்பும், சுய தொழில் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

எதிர்கால வளர்ச்சி, வர்த்தகம் அதிக மற்றும் நீடித்த உற்பத்தி ஆகியவற்றை எட்ட கால்நடை களைத் தாக்கும் தொற்றுநோய் களை தடுப்பது அவசியம். தீவனம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, குறைந்த உற்பத்தி திறன், குறை வான கால்நடை நல மருத்துவ சிகிச்சை வசதிகள், சரியான பராமரிப்பு முறைகளை கடைபிடிக்க இயலாமை போன்ற சவால்கள் இத்துறையில் உள்ளன. இதற்காக பல்வேறு புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகளை கையாள்வது அவசியம்.

கல்வி என்பது ஒரு தொடர் நிகழ்வு. பட்டம் பெறுவதோடு அதை முடித்துக் கொள்ளாமல் மேலும் தொடர வேண்டும். மாணவ, மாண விகள் இத்துறையில் பல சாதனை களைப் படைக்க வேண்டும். எப் போதும் மனதளவில் இளமை யாகவும், புதிய எண்ணங்களை உள்வாங்குபவர்களாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in