

திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்துக்குட்பட்ட பச்சைமலையில் உள்ள வண்ணாடு ஊராட்சியில் அமைந்துள்ளது கோரையாறு அருவி.
இந்த அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான பாதை முறையாக இல்லாததுடன், அருவிப் பகுதியிலும் வனத் துறை கண்காணிப்பு, பாதுகாப்பு இல்லாததால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியது:
துறையூர் அடிவாரத்தில் இருந்து கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, மூலக்காடு வனத் துறை சோதனைச் சாவடிகளைக் கடந்து, 8 கி.மீ மலைப் பாதை வழியாக செம்புலிச்சான்பட்டி பிரிவு, மணலோடை, தோனூர், சின்ன- பெரிய இலுப்பூர் வழியாக புதூர் மலைக் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து குறிச்சி செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் அருவிக்குச் செல்லும் பாதை உள்ளது.
அங்கிருந்து 600 மீட்டர் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள அருவியை 100 மீட்டர் ஒற்றையடிப் பாதை, அதனிடையேயுள்ள சிறிய ஓடை, அதன்பிறகு படிக்கட்டுகள் வழியாக சென்றடையலாம்.
இந்த 100 மீட்டர் ஒற்றையடிப் பாதை மிகவும் ஆபத்தான வகையில் உள்ளதால், அங்கு முறையான பாதை அமைக்க வேண்டும்.
மேலும், மழைக் காலங்களில் ஓடையைக் கடப்பது சிரமம் என்பதால், ஓடையில் இரும்பாலான சிறிய நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
அருவியில் தண்ணீர் கொட்டும் இடத்துக்கு கைப்பிடிகள் இல்லாத பாறை மீது ஏறி செல்ல வேண்டியுள்ளது. மிக ஆழமான அப்பகுதியில், அதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்பு பலகை எதுவுமில்லை. சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றுவதற்கான அறையும் இல்லை. மேலும், அருவி பகுதியில் வனத் துறையின் கண்காணிப்பு இல்லாததால் மது அருந்துவோரால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
அடிவாரத்தில் இருந்து அருவிக்குச் செல்லும் வழியில், வழிகாட்டி அறிவிப்புப் பலகை இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர். தற்போது, கரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, இந்த நேரத்தைப் பயன்படுத்தி அருவிப் பகுதியில் முறையான பாதை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வசதிகளை வனத் துறையோ, ஊராட்சி ஒன்றிய நிர்வாகமோ ஏற்படுத்த வேண்டும் என்றனர்.