Published : 17 Jul 2021 03:15 AM
Last Updated : 17 Jul 2021 03:15 AM

சிறந்த ஆராய்ச்சி நிறுவனமாக தேர்வு; திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்துக்கு விருது: இணைய வழியில் மத்திய வேளாண் அமைச்சர் வழங்கினார்

திருச்சி

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துக்கு சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்துக்கான சர்தார் பட்டேல் விருது கிடைத்துள்ளது. இணைய வழியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இவ்விருதை வழங்கினார்.

இதுதொடர்பாக திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் எஸ்.உமா நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தில் உள்ள 104 நிறுவனங்களில் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமாக திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தேர்ந்தெடுக்கப்பட்டு, சர்தார் பட்டேல் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது கேடயம், சான்றிதழ் மற்றும் ரூ.10 லட்சம் கொண்டது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் நிறுவன நாளான நேற்று இணைய வழியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இவ்விருதை வழங்கினார்.

கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளை முன்னிறுத்தியே இந்த விருது வழங்கப்பட்டது. அந்த வகையில் பல்வேறு சாதனைகளை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மேற்கொண்டுள்ளது.

ஆசியாவிலேயே பாரம்பரிய வாழைக்கான மரபணு மூலக்கூறு வங்கியைக் கொண்டது திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 460 வாழை ரகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நிதியுதவி மூலம் கரு வாழை, விருப்பாச்சி, சிறுமலை போன்ற அழியும் நிலையில் இருந்த பல்வேறு மலை வாழை ரகங்களை மீட்டெடுத்துள்ளோம்.

அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு வறட்சி மற்றும் புயலைத் தாங்கி வளரும் புதிய வாழை ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

மேலும், உயிரியக்கவியல் முறையில் நவீன திசு வளர்ப்பு தொழில்நுட்பத்திலான மற்றும் ப்ரோ வைட்டமின் ஏ, இரும்பு சத்து ஆகியவை மிக்க வாழை ரகங்களை உருவாக்கியுள்ளோம். இந்த ரக வாழை 3 அல்லது 4 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உருவாக்கிய பனானா சக்தி என்ற பெயரிலான நுண்ணூட்ட உரம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த உரத்தைப் பயன்படுத்துவதால் 18- 20 சதவீதம் விளைச்சல் அதிகம் கிடைப்பதால் நல்ல வரவேற்பு உள்ளது. சர்க்கரை நோயாளிகள் உண்பதற்கான வாழை ரகங்களையும் கண்டறிந்துள்ளோம். இந்த வாழை ரகங்கள் அடுத்தாண்டு வரலாம் என்றார்.

அப்போது, வாழை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானிகள் வி.குமார், ஆர்.செல்வராஜன், முதுநிலை விஞ்ஞானி சி.கற்பகம் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x