

கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, மதுக்கூர் அதிமுக ஒன்றியச் செயலாளரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை அடுத்த கல்யாணஓடை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்(54). அதிமுக மதுக்கூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர். இவரது மனைவி அமுதா, மதுக்கூர் ஒன்றியக் குழுத் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டில் முத்துப்பேட்டை பகுதியில் ராஜேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி, செந்திலை மதுக்கூர் போலீஸார் விசாரணைக்காக கடந்த 14-ம் தேதி அழைத்துச் சென்றனர்.
அப்போது, செந்திலின் ஆதரவாளர்கள் 100 பேர் காவல் நிலையத்துக்கு வந்து, செந்திலை விடுவிக்கக் கோரினர். அப்போது, ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
இதை பயன்படுத்தி செந்தில் காவல்நிலையத்திலிருந்து தப்பிச் சென்று, தலைமறைவாகிவிட்டார். அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவானார்.
இதைத் தொடர்ந்து, செந்தில் ஆதரவாளர்கள் 15 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவான செந்திலை பிடிக்க பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், செந்தில் சென்னையில் ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார், செந்திலை நேற்று கைது செய்தனர்.
மேலும், அவருடன் இருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த காமராஜ்(42), மதுக்கூரைச் சேர்ந்த ராஜவர்மன்(46), ஜவஹர்(47) ஆகியோரையும் கைது செய்து நேற்று பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 4 பேரையும் ஜூலை 30-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் தஞ்சாவூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த டிசம்பர் மாதம் மதுக்கூரில் நடைபெற்ற அம்மா கிளினிக் திறப்பு விழாவுக்கு சென்றபோது, அவரை கட்சி தொண்டர் ஒருவர் ஒருமையில் அவதூறாக திட்டியுள்ளார்.
அதன் பின்னணியில் செந்தில் இருப்பதாகவும், அதுகுறித்த புகாரின்பேரிலும் செந்தில் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.