

திருநெல்வேலியில் தாமிரபரணி யில் கழிவுநீர் கலப்பதை தவிர்க்க சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்பு களை மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது. இந்நடவடிக்கை மூலம் தற்போது நாளொன்றுக்கு 18 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி தனது பாதையில் கடக்கும் பெரிய நகரம் திருநெல்வேலி. இங்குதான் அனைத்து நகரங்களையும்விட அதிகமான கழிவுகளை அது சுமக்கிறது. திருநெல்வேலியில் கருப்பந்துறை முதல் வெள்ளக் கோயில் வரை 27 இடங்களில் ஆற்றில் சாக்கடை கலக்கிறது. ஆட்சியர் அலுவலகம் அருகே திறந்தவெளி கழிப்பிடமாகவும், பன்றிகள் வளர்க்கும் இடமாகவும் ஆற்றங்கரை மாறி விட்டது.
688 இடங்களில் சாக்கடை கலப்பு
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அனைத்து கடைகள், தங்கும் விடுதிகளின் கழிவுகள் சிந்துபூந்துறையில் ஆற்றுக்குள் விடப்படுகின்றன. திருநெல்வேலியில் மட்டும் 1 நிமிடத்துக்கு 11 லட்சம் லிட்டர் கழிவு நீர் தாமிரபரணியில் கலப்பதாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் 686 இடங்களில் ஆற்றில் சாக்கடை கலப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலியில் தாமிரபரணி யில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங் கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், தன்னார்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆற்றங்கரை யில் சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்பு களை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சியில் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்கும் பொருட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்புகள் (DEWATS Technology Structure) தற்போது அமைக்கப் பட்டு வருகிறது. தச்சநல்லூர் மண்டலப் பகுதிக்குட்பட்ட சிந்துபூந்துறை, உடையார்பட்டி, செல்விநகர், சந்திப்பு பகுதி ஆகிய இடங்களில் உள்ள கழிவுநீர் ஓடையில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 18 லட்சம் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வடிகட்டி அமைப்பு
இந்த கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தவிர்க்கும் வகையில் தற்போது முதல்கட்டமாக வார்டு எண் 5, சிந்துபூந்துறைபகுதியில் ஆற்றின் கரை ஓரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை 1.50 மீட்டர் விட்டமுள்ள 2 நீர்த்தேக்க தொட்டிகளில் சேமித்து பின்னர், மின் மோட்டார்கள் மூலம் அருகில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் உடையார்பட்டி சாலையில் ஏற்கெனவே பயன் பாட்டில் உள்ள பாதாள சாக்கடை குழாயுடன் இணைக்கும் பணி தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் போது கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பது தவிர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.