

மகாமகப் பெருவிழாவையொட்டி சரஸ்வதி மகால் நூலகம் சார்பில் உருவாக்கப்பட்ட ‘மகாமகம் 2016’ சிறப்பு மலரை தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் நேற்று வெளியிட, நூலக நிர்வாக அலுவலர் பூங்கோதை பெற்றுக்கொண்டார்.
பின்னர், ஆட்சியர் கூறும்போது, “260 பக்கங்கள் கொண்ட இந்த மலரில் மகாமகம் குறித்த அடிப்படைத் தகவல்கள், திருத்தலங்கள் குறித்த 50 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.300.
அரசு பொருட்காட்சி…
கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி திடலில் வரும் 13-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு அரசுப் பொருட்காட்சி நடைபெறவுள்ளது. மேலும், கைத்தறி விற்பனைக் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
கலை நிகழ்ச்சிகள்…
கும்பகோணம் மகாமகம் கலையரங்கில் வரும் வரும் 13-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு, தென்னகப் பண்பாட்டு மையம் உள்ளிட்டவை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
6 இடங்களில் அன்னதானம்…
கும்பகோணத்தில் 307 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, பொதுக் கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 6 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற 2 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
16 லட்சம் துணிப் பைகள்…
மகாமகத்துக்கு வரும் பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு வந்ததும் அவர்களுக்கு ஒரு துணிப் பை வழங்கப்படும். அதில், அவர்களது காலணிகள் உள்ளிட்டவற்றை வைத்துக்கொள்ளலாம். காரில் வருவோருக்கும் துணிப் பை வழங்கப்படும்.
யாரும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக துணிப் பை வழங்கப்படுகிறது. மொத்தம் 16 லட்சம் துணிப் பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்றார்.