Published : 16 Jul 2021 08:00 PM
Last Updated : 16 Jul 2021 08:00 PM

ஜூலை 31 வரை ஊரடங்கு; திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை: எவை எவைக்குத் தடை?- முழு விவரம்

சென்னை

ஜூலை 31 வரை 12 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளைத் திறக்க இம்முறையும் அனுமதி அளிக்கப்படவில்லை. எவை எவைக்குத் தடை என்பது குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், மாநிலத்தின் கரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 31-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

எவை எவைக்குத் தடை?

* மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக) செயல்படத் தடை

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.

* திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை.

* அனைத்து மதுக்கூடங்கள் திறக்க அனுமதி இல்லை.

* நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி இல்லை.

* பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.

* பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை.

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படத் தடை.

* உயிரியல் பூங்காக்கள் திறக்க அனுமதி இல்லை.

* நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

* இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர, அனைத்துப் பகுதிகளிலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x