சிவகங்கை அருகே நாயக்கர் கால வாமனக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை அருகே நாயக்கர் கால வாமனக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு
Updated on
1 min read

சிவகங்கையை அடுத்த சோழபுரம் குண்டாங்கண்மாயில் 16 மற்றும் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வாமனக்கல் கல்வெட்டைத் தொல்லியல் ஆர்வலர்கள் புலவர் கா.காளிராசா, சுந்தரராஜன், நரசிம்மன், ஆரோக்யசாமி ஆகியோர் கண்டறிந்தனர்.

இதுகுறித்துப் புலவர் கா.காளிராசா கூறியதாவது:

''நாயக்கர்கள் மதுரையைச் சுற்றிலும் 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி செய்தனர். சக்கந்தி பாளையத்திற்கு உட்பட்ட பகுதியாகச் சோழபுரம் இருந்திருக்கும். இங்கு கண்டறியப்பட்ட கல் நான்கரை அடி உயரமும், 4 பக்கங்களையும் கொண்டது. ஒரு பக்கத்தில் வாமன உருவ புடைப்புச் சிற்பமும், மற்றொரு பக்கத்தில் சிதைந்த நிலையில் 30 வரிகளும் காணப்படுகின்றன. இது 16 மற்றும் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலக் கல்வெட்டு.

இது ‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ எனும் மங்களச் சொல்லோடு தொடங்குகிறது. சாகப்த ஆண்டு சிதைந்து உள்ளது. காத்தம நாயக்கர் என்ற பெயர் உள்ளது. இவர் அரச பிரதிநிதியாக இருந்திருக்கலாம். மேலும் மதுனா ஆலங்குளம், குண்டேந்தல், குத்திக்குளம், பெருமாளக்குளம், கோரத்தி கண்மாய் போன்ற நீர்நிலைகள் குறிப்பிடப் பெற்றுள்ளன. இடையில் பத்து வரிகள் சிதைந்துள்ளன. இறுதியில் இதற்குக் கேடு விளைவிப்பவர் கங்கைக் கரையிலே காரம் பசுவைக் கொன்ற தோசத்தில் போவர் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாமன அவதாரம் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்று. இந்த அவதாரத்தில் மாவலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்க 3 அடி உயரம் கொண்ட ஏழை அந்தணராகச் சென்று, தன் காலடியில் 3 அடி நிலம் கேட்டு உலகை அளந்தார். இதனால் இந்த உருவம் மன்னர் காலங்களில் நிலம் தொடர்பான கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

சோழபுரத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் உள்ள வாமன உருவம் ஒரு கையில் விரித்த குடை, மற்றொரு கையில் ஊன்றுகோல், தலையில் குடுமி, மார்பில் முப்புரி நூல், இடுப்பில் பஞ்ச கச்சம் ஆகியவற்றோடு காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு மூலம் இடத்தைத் தானமாக கொடுத்து நீர்நிலைகளை வெட்டியதை அறியலாம்.

ஏற்கெனவே வாமன உருவக் கல்வெட்டுகள் கொல்லங்குடி அருகே சிறுசெங்குளிப்பட்டி, சிவகங்கை அருகே சக்கந்தி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன''.

இவ்வாறு புலவர் கா.காளிராசா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in