Published : 16 Jul 2021 05:31 PM
Last Updated : 16 Jul 2021 05:31 PM

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய புதிய திட்ட மதிப்பீட்டை விரைந்து தயாரிக்க வேண்டும்: அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல்

ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு.

சென்னை

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் மற்றும் புதியதாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டப் பணிகள் குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூலை 16) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"முதல்வரின் ஆலோசனைப்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள், பராமரிக்கப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள், ஆய்வில் உள்ள புதிய குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் குறித்து அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, செயலாக்கத்தில் உள்ள 51 குடிநீர் மற்றும் 19 பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளைத் துரிதப்படுத்தி, விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், பராமரிப்பில் உள்ள 557 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்குச் சீரான முறையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிடவும் அறிவுறுத்தினார்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1,502.72 கோடி மதிப்பீட்டிலும், ராமநாதபுரம் மாவட்டம்-குதிரை மொழியில் ரூ.2,036.83 கோடி மதிப்பீட்டிலும் தலா 60 எம்.எல்.டி. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை விரைந்து தொடங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்குத் திட்ட மதிப்பீட்டினை விரைந்து தயாரிக்குமாறு அறிவுறுத்தினார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x