மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் காலியாக உள்ள பதவிகள்: 4 மாதத்தில் நிரப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் காலியாக உள்ள பதவிகள்: 4 மாதத்தில் நிரப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பணியிடங்களை 4 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் காலியாக உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கும், திருநெல்வேலி, சேலம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றை நிரப்பக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சிகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவராக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுப்பையாவை நியமித்துள்ளதாகத் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் உள்ள தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வுக் குழுவை ஒரு வாரத்தில் நியமிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இந்தத் தேர்வுக் குழு, காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரம் வெளியிட்டு, 4 மாதத்திற்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in