தடுப்பூசியிலும் ஊழல்; மோடி அரசின் ஊழலை வெளிக்கொண்டும் வரும் பணியைத் தொடங்கியுள்ளது காங்கிரஸ்: எம்.பி. ஜோதிமணி பேட்டி

தடுப்பூசியிலும் ஊழல்; மோடி அரசின் ஊழலை வெளிக்கொண்டும் வரும் பணியைத் தொடங்கியுள்ளது காங்கிரஸ்: எம்.பி. ஜோதிமணி பேட்டி
Updated on
1 min read

"மத்திய அரசு தடுப்பூசியில் கூட ஊழல் செய்கிறது. மோடி அரசின் ஊழலை வெளிக்கொண்டு வரும் பணியை காங்கிரஸ் அரசு தொடங்கியுள்ளது" என்று எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.

கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கடந்த 7 ஆண்டுகளில் 23 கோடி பேர் ஏழைகளாகியுள்ளனர். இதற்கு மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, நிர்வாகத் திறமையின்மையே காரணம். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்கு மோடி அரசு வரி விதித்துள்ளது.

தோல்வியடைந்த மோடி அரசால் தற்போது பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. பெட்ரோல் தற்போது ரூ.100-ஐத் தாண்டியுள்ளது. இதனால் ஏழை, எளியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் 66 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

கலால் வரி உயர்த்தப்பட்டதால்தான் அனைத்தும் விலை உயர்ந்து வருகிறது. மத்திய அரசு மாநிலங்களுக்கான வாட் வரியைக் குறைத்துக் கொள்ளுமாறு கூறுகிறது. அதே நேரத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி வரியைத் தரவில்லை.

பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் ரூ.25 லட்சம் கோடியில் ஊரக வேலை திட்டம், சுகாதாரம், கல்விக்குக் கூடுதல் நிதி எதையும் ஒதுக்கவில்லை. எங்கே போகிறது அந்தப் பணம்? அதனை எடுத்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகையாக அளிக்கின்றனர். இது வேறு ரூபத்தில் தேர்தல் நிதியாக பாஜகவுக்கு வருகிறது. அதனால்தான் பாஜக இதில் கொள்ளையடிப்பதாகக் கூறுகிறோம். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு தடுப்பூசியில் கூட ஊழல் செய்கிறது. தடுப்பூசி தயாரிப்பதிலும் ஊழல் நடக்கிறது. காங்கிரஸ் கட்சி அழுத்தம் காரணமாகவே மக்களுக்கு இலவசத் தடுப்பூசி போடப்படுகிறது. மோடி அரசின் ஊழலை வெளிக்கொண்டு வரும் பணியை காங்கிரஸ் தொடங்கியுள்ளது".

இவ்வாறு ஜோதிமணி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in