

ஊடகங்கள் விரைவில் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படும், ஆறு மாதத்தில் அடக்கப்படுவார்கள் என ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசுவதா? என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்தார்.
பாஜக தலைவராகப் பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை சென்னைக்கு வரும் வழியில், வரவேற்பு அளிக்க வேண்டும் என பாஜக தலைமை கேட்டுக்கொண்டதன் பேரில், ஆங்காங்கே அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கப்படும் கூட்டங்களில் அவர் பேசி வருகிறார். அவ்வாறு நேற்று திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்ட கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “இந்த ஊடகங்களை நீங்கள் மறந்துவிடுங்கள். நம்மைப் பற்றி பொய்யாகச் செய்தி போடுகிறார்கள். என்ன பண்ணலாம் என்பதையெல்லாம் மறந்துவிடுங்கள். அடுத்த 6 மாதத்திற்குள் இந்த ஊடகங்களை நாம் கட்டுப்படுத்தலாம், கையிலெடுக்கலாம். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
ஆகவே, தொடர்ந்து பொய்யான விஷயங்களை எந்த ஒரு ஊடகமும் சொல்ல முடியாது. முன்னர் மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகியுள்ளார். அனைத்து ஊடகங்களும் அவருக்குக் கீழ்தான் வரப்போகின்றன” என்று பேசினார்.
இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் அண்ணாமலையின் பேச்சைக் கண்டித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊடகங்கள் விரைவில் பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது ஊடகங்களை மிரட்டும் செயல்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
“அண்ணாமலையின் பேட்டி மறைமுகமாக ஊடகங்களை மிரட்டுவதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இது ஒரு மிரட்டல் தொனி. ஆகவே இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒன்று. ஊடகத்துறை என்பது தனித்துவத்தோடு சுயமாகச் செயல்படும் ஒன்று. அது கருத்துச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அது எங்கள் வசம் வந்துவிடும் என்று சொல்வது மிகத் தவறான ஒன்று. அதை மிரட்டலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.