மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண்க: வைகோ

மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண்க: வைகோ
Updated on
1 min read

மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்தை மனிதாபிமானத்துடன் அணுகி தீர்வு காண வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜெயலலிதா ஆட்சி முடிவுறும் தறுவாயில் தமிழகம் போராட்டக் களமாக மாறிக் கொண்டு இருக்கின்றது.

ஆசிரியர் சங்கங்களின் போராட்டங்களை அடுத்து, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கானோர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஜெயலலிதா அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக, அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரைவுரையாளர்கள், சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 83 அரசுக் கலைக் கல்லூரிகளில் 3,445 கௌரவ விரைவுரையாளர்கள் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்று, கடந்த 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரை செய்து இருக்கின்றது.

ஆனால், முந்தைய திமுக, மற்றும் தற்போதைய அதிமுக ஆட்சியாளர்கள், பல்கலைக் கழக மானியக்குழு நிர்ணயித்த ஊதியத்தை வழங்காமல், ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பயிலும் அரசு கலைக் கல்லூரிகளின் மதிப்புமிக்க பேராசிரியர்களைக் கொத்தடிமைகள் போல நடத்துவது வேதனை அளிக்கிறது. இன்றுவரையிலும் அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு எதுவும் இல்லை.

எனவே தங்கள் பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு குறித்து கோரிக்கை வைக்கும்போது, எந்த நேரத்திலும் அவர்களைப் பணி நீக்கம் செய்ய முடியும் என்று அரசு கலைக்கல்லூரி நிர்வாகத்தினர் மிரட்டி வருவது கண்டிக்கத்தக்கது ஆகும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அதேபோல, தமிழக அரசு ஊதிய விகிதங்களை வழங்க வேண்டும்; பெண் மருத்துவர்களுக்கு ஆறுமாத கால மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

கடந்த பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் மாற்றுத் திறனாளிகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு தலைமைச் செயலாளர் அளித்த உறுதி மொழியை ஜெயலலிதா அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்தை மனிதாபிமானத்துடன் அணுகித் தீர்வு காண வேண்டும்'' என வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in