

கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது காலதாமதமின்றி குற்றவியல்நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, இணை ஆணையர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அறநிலையத்துக்குச் சொந்தமான நிலம், மனை, கட்டிடம், கடைகள் போன்றவற்றில் ஆக்கிரமிப்புகள், அனுமதியற்ற கட்டுமானங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தியவர்களையும், சொத்துகளுக்கு வாடகை செலுத்தாமலும், குத்தகை, அடமானம் அல்லது வழங்கப்பட்ட உரிம காலம் முடிவுற்ற பிறகும் காலி செய்யாமல் தொடர்ந்து அனுபவித்து வருபவர்கள், வாடகை ஒப்பந்தம் ஏதுமின்றி அனுபவித்து வருபவர்கள் ஆகியோர் ஆக்கிரமிப்புதாரர் எனஇந்து சமயம் மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டம் பிரிவு 78-ன்கீழான விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துக்குச் சொந்தமான அசையா சொத்துகளின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்போது, ஒத்துழைப்பு கோரி வருவாய் மற்றும் காவல்துறையிடம் கோயில் நிர்வாகிகள் அணுகும்போது அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே, அறநிலையத்துக்குச் சொந்தமான அசையா சொத்துகளை கண்டறியவும் மற்றும் பரிசீலனை செய்யவும், கோயில் வாரியாக அமைக்கப்பட்ட குழுக்கள் மூலம் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், மூன்றாம் நபர் அனுபவத்தில் உள்ள இனங்கள் மற்றும் சட்டவிரோதமாக நிலக்கிரையம் செய்யப்பட்டிருக்கும் இனங்களில் காலதாமதமில்லாமல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதை மீறும் சம்பந்தப்பட்ட சார்நிலை அலுவலர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.