Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM

தான் பயணித்த விமானத்தில் விமானியாக இருந்த சக எம்பி: தயாநிதி மாறனின் ‘நினைவில் நின்ற விமானப் பயணம்’

டெல்லியில் இருந்து சென்னைக்கு தான் பயணிக்கும் விமானத்தில் விமானியாக சக எம்பி ராஜீவ் பிரதாப் ரூடி இருப்பதை பார்த்து வியந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், இது எனது ‘நினைவில் நின்ற விமானப் பயணம்’ என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 13-ம் தேதி நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பங்கேற்றார். அன்று மாலைவிமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை திரும்ப இண்டிகோ விமானத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். அப்போதுபயணிகள் அனைவரும் தங்கள்இருக்கைக்கு வந்துவிட்டதாகவும்,அந்த விமானம் புறப்பட தயாராக இருப்பதாகவும் விமானி அறிவித் துக் கொண்டிருந்தார்.

அப்போது, தயாநிதி மாறனைபார்த்த அவர், “நீங்களும் இந்தவிமானத்தில் தான் வருகிறீர்களா?” என்று கேட்டுள்ளார். அவர்முகக் கவசம் அணிந்திருந்ததால், தயாநிதி மாறனால் அவரை அடையாளம் காண முடியவில்லை. அதை அறிந்த விமானி சிரித்தபடியே, ‘‘உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா?’’ என்றார். அதன் பிறகுதான், அவர் தயாநிதி மாறனின் சக மூத்த எம்பியும், தயாநிதி மாறனின் தந்தை முரசொலிமாறன், மத்திய வர்த்தகத் துறைஅமைச்சராக பணியாற்றியபோது, அதே துறையில் இணையமைச்சராக பணியாற்றிய ராஜீவ் பிரதாப் ரூடி என்பதும் தெரியவந்தது.

இந்த நிகழ்வு தொடர்பாக தயாநிதி மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நினைவில் நின்ற விமானப் பயணம்’ என்ற தலைப்பில் பதிவிட்டிருப்பதாவது:

‘‘அவர் முகக் கவசம் அணிந்துகொண்டு என்னிடம் பேசும்போது, அவர் முகத்தை அடையாளம் காண முடியாவிட்டாலும், அவரது குரல் ரொம்பவே பரிச்சயமாகத் தெரிந்தது. அவர் என்னைப் பார்த்துசிரித்தது, முகக் கவசத்தை மீறி அவரது கண்களில் தெரிந்தது. அன்று 2 மணி நேரத்துக்கு முன்புதான், என்னுடன் அந்த மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்றவர், இப்போது அரசியல்வாதி தோற்றத்திலிருந்து விமானியாக மாறி இருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தேன்.

அவரிடம் மகிழ்ச்சியுடன் ‘நீங்கள்ஒரு விமானியாக பறப்பதை என்னால் நம்ப முடியவில்லை’ என்றேன். அதற்கு ரூடி சிரித்தபடி, ‘ஆம், நீங்கள் என்னை அடையாளம் காண முடியாதபோதே அதை அறிந்து கொண்டேன். நான் தொடர்ச்சியாக பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானி’ என்றார். எனது இனிய நண்பரும், சக எம்பியுமான ஒருவர் விமானியாக இருப்பதைக் கண்டு பெருமைப்பட்டேன்.

ஒரு எம்பியாக ஆன பிறகும் விமானியாக இருப்பது அபூர்வம் அல்லவா! நீண்ட நாட்களுக்கு இந்த இனிய நிகழ்வு என் நினைவில் நிச்சயமாக நிழலாடிக் கொண்டிருக்கும். எங்களை பத்திரமாக புது டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தமைக்கு விமானி ராஜீவ் பிரதாப் ரூடிக்கு எனதுகோடி நன்றி.’’

இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்திருந்தார்.

யார் இந்த ராஜீவ் பிரதாப் ரூடி?

பிஹார் மாநிலம் பாட்னாவில் 1962-ம் ஆண்டு பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ராஜீவ் பிரதாப் ரூடி. பாட்னாவில் உள்ள ஏ.என். கல்லூரியில் பொருளாதாரத் துறை விரிவுரையாளராகவும் பணியாற்றினார். கல்லூரிப் பருவத்திலேயே அரசியல் ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 1990-ம் ஆண்டு பிஹார்மாநிலம், தரையா சட்டப்பேரவை தொகுதியில், ஜனதா தள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பாஜகவில் இணைந்து பலமுறை எம்பியானார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சராகவும் இருந்தார். தற்போதும் எம்பியாக உள்ளார். இவர் வணிக ரீதியிலான விமானங்களை இயக்குவதற்கான உரிமமும் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x