

ஈரோடு வேளாண்மைத்துறை மூலம் திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம், இயற்கை விவசாயத்திற்குப் பயன்படும் உயிர் உரங்கள், ஒட்டுண்ணிகள், நன்மை செய்யும் பூஞ்சானங்கள், நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் போன்றவை, பல்வேறு ஆய்வகங்கள் மூலம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 15 திட உயிர் உர உற்பத்தி மையங்கள், 12 திரவ உர உற்பத்தி மையங்கள், 10 உயிரியல் காரணி ஆய்வகங்கள், 2 ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையங்கள், 41 ஒட்டுண்ணி உற்பத்தி ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே ஈரோடு மாவட்டம் பவானி அரசு விதைப்பண்ணை வளாகத்தில், முதல் முறையாக திரவ உயிர் உரம் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. இதனைத் தொடக்கி வைத்து வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்திற்கு பல ஆண்டுகளாக திரவ வடிவிலான உயிர் உரங்கள் வேறு மாவட்டத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது. தற்போது ஈரோடு மாவட்டத்திலேயே அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்களைக் கொண்டு திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளது. அதன் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திரவ உர உற்பத்தி ஆய்வகத்தில் முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் வகையில் சுமார் ரூ.1.20 கோடி மதிப்புள்ள நவீன இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு உற்பத்தியாகும் உரங்கள் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களுக்கும், கோவை, நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. திரவ உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானிய விலையில் விநியோகிக்கப்படும்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் அரசு சார்பில் இயங்கும் பல்வேறு ஆய்வகங்கள் மூலம் ஆண்டுக்கு 20 ஆயிரம் கிலோ டி.விரிடி, 5 ஆயிரம் கிலோ சூடோமோனாஸ், 73 ஆயிரம் கிலோ திட உயிர் உரங்கள், 6 கோடியே 48 லட்சம் ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ரசாயன மருந்துகள் மற்றும் உரங்களைப் பயன்படுத்துவது குறைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் வேளாண் உதவி இயக்குநர்கள் மு.தமிழ்செல்வன், குமாரசாமி, வேளாண்மை அலுவலர் சத்தியராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.