

மேடவாக்கத்திலிருந்து துறைமுகத்துக்கு டேங்கர் லாரி ஒன்று கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அதை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்லால் (42) என்பவர் ஓட்டி வந்தார்.
நேற்று அதிகாலை 1 மணியளவில் டேங்கர் லாரி அடையாறு பகுதியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த கச்சா எண்ணெய் சாலையில் வழிந்து மழைநீர்போல் ஓடியது.
விபத்து பற்றி அறிந்ததும், அபிராமபுரம் போலீஸார் மற்றும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சாலையில் வழிந்தோடிய கச்சா எண்ணெய்யை சுத்தம் செய்தனர்.
இந்த விபத்து காரணமாக அடையாறு பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரி, 2 ராட்சத கிரேன்கள் உதவியுடன் அகற்றப்பட்ட பின்னர் போக்குவரத்து சீரானது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ராம்லாலுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. போலீஸார் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையுடன், மது அளவு பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் அவர் குடித்திருந்தது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக லாரி ஓட்டுநர் ராம்லாலை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.