

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கடந்த 12-ம் தேதி முதல் கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது. இதன்படி கடைகளை திறந்து வைப்பதற்கான நேரம் இரவு 9 மணிவரை நீட்டிக்கப்பட்டது.
இதுதவிர, ஜூலை 12 முதல் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மட்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்டவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டது.
அதே நேரம், புதுச்சேரி தவிர இதர மாநிலங்களுக்கிடையில் பேருந்து போக்குவரத்துக்கும், சர்வதேச விமான போக்குவரத்துக்கும் தடை தொடர்கிறது. திரையரங்குகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கும் தடை தொடர்கிறது.
இந்நிலையில், நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 19-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அடுத்தகட்ட ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.