

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக போக்சோ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் அவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இரு நாட்களில் காஞ்சி, செங்கை மாவட்டங்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செவிலிமேடு, மிலிட்டரி சாலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன்(23). இவர் பாலுசெட்டிசத்திரம் அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 16 வயது சிறுமியை முறையின்றி அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பான அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சிறுமியை மீட்ட பாலுசெட்டிசத்திரம் போலீஸார் மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம், மேல்திருவள்ளூர், குளத்துமேடு தெருவைச் சேர்ந்த கக்குரியான் மகன் அசாருதீன்(21). இவர் சோமங்கலம் அருகே வசிக்கும் 17 வயது சிறுமியை முறையின்றி அழைத்துச் சென்றார். இவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த சோமங்கலம் போலீஸார் அந்தச் சிறுமியை மீட்டனர்.
உத்திரமேரூர் அருகே தட்டான்குளம், வினோபா நகர் பகுதியைச்சேர்ந்த வேலு மகன் செல்வகுமார்(28). இவர் உத்திரமேரூர் அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்முறை செய்துள்ளார். இதனால் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்தார். இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சம்பத்குமார், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் மகளிர் போலீஸார் செல்வகுமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வாவரம் அருகே அனாகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் 17 வயது சிறுமியை அழைத்துச் சென்றதுதொடர்பாக சங்கர் நகர் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இவர் தாம்பரம் மகளிர் பிரிவுபோலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை போக்சோவில் கைது செய்துள்ளனர்.
"சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றன. இதுபோல் பெண் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் அத்துமீறல்களை கட்டுப்படுத்த போக்சோ சட்டப்பிரிவுகளை கடுமையாக்க வேண்டும். அந்தச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.