

திருவள்ளூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றில் திருத்தம் செய்யவும், புதிய ஆதார் அட்டை உள்ளிட்டவற்றுக்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று திருவள்ளூர் - காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இம்முகாமில், மாவட்டத்தில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களின் அடையாள ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றில் பெயர், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்யப்பட்டன. புதிய ஆதார் அட்டை உள்ளிட்டவற்றுக்கு பதிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், மாவட்டத்தில் ஏற்கெனவே 253பேர் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள நிலையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு புதியதாக கண்டறியப்பட்ட 139 மூன்றாம் பாலினத்தவர்கள், அடையாள அட்டை பெறுவதற்காக பதிவு செய்யப்பட்டது.
இந்த முகாமில் 200 மூன்றாம் பாலினத்தவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
முகாமின் போது செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறும்போது, “மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஆதார் அட்டை உள்ளிட்டவற்றில் திருத்தம், பதிவு செய்வதற்கு கோட்ட அளவிலான சிறப்புமுகாம் பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் ஆகியகோட்டங்களில் இனி வருங்காலங்களில் நடைபெறும்’’ எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) ராஜராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.