

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. பின்னர் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கியத் திருவிழாவான தேரோட்டம் மற்றும் தரிசன விழாவிற்கு பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வில்லை. இதனால் பக்தர்கள் இல்லாமல் கோயிலுக்குள் விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற இருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள் எழுந்தருளினர். இதையடுத்து காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய விழாவான தரிசன விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து நடராஜப் பெருமான், சிவகாமி அம்பாளுக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெற்றது. மதியம் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாமி அம்பாள் பக்தர்கள் இன்றி சித் சபைக்கு எழுந்தருளினர். தீபாராதணை கட்டப்பட்டது. மாலை 6 மணி முதல் பக்தர்கள் சித்சபையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர் கள் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவு 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.