

ராமேசுவரத்தில் பத்து மாதங் களுக்கு முன்பு காணாமல்போன இளைஞரை அவரது நண்பர்களே கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராமேசுவரம் சின்னவன் பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் மணிராஜ். இவரது மகன் கணேஷ்ராஜ்(20). இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஆட்டோ ஓட்டி வந்தார். கணேஷ்ராஜின் தாத்தா சுரேஷ் ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் பேரனைக் காணவில்லை என 6.9.2020 அன்று புகார் அளித்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகி யோரிடமும் புகார் அளித்துள் ளார். நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. எனவே முதல்வரின் தனிப் பிரிவுக்குப் புகார் மனு அளித்துள்ளார்.
இதையடுத்து குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் கணேஷ்ராஜின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கணேஷ்ராஜின் நண்பர்கள் சிலர் மீது சந்தேகம் தெரிவித்தனர்.
கணேஷ்ராஜின் நண்பர்களான ராமேசுவரம் ராம் நகரைச் சேர்ந்த முத்துச்சேரன்(22), பத்ரகாளியம் மன் கோவில் தெருவைச் சேர்ந்த அஜித்(24), பாரதி நகரைச் சேர்ந்த மைக்கேல்(23) ஆகிய மூவரிடம் போலீஸார் விசாரித்தனர்.
இதில் நண்பர்களிடையே மது, கஞ்சா போதையில் மோதல் ஏற் பட்டு கணேஷ்ராஜை கொலை செய்து ராமேசுவரம் பேருந்து நிலையம் மணல்மேடு பகுதியில் புதைத்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீ ஸார் கைது செய்தனர்.
இவர்களை சம்பவ இடத்துக்குப் போலீஸார் நேற்று அழைத்து வந்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த் திக், மருத்துவர்கள் எனப் பல் வேறு துறை அதிகாரிகள் முன் னிலையில் குற்றவாளிகள் குறிப் பிட்ட இடத்தை தோண்டி கணேஷ் ராஜின் எலும்புகளை எடுத்தனர்.
காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறும்போது, நண்பர்களிடையே போதையில் இக்கொலை நடந் துள்ளது. இந்த வழக்கில் மூவரை கைது செய்து விட்டோம். ராமேசு வரம் முருங்கைவாடியைச் சேர்ந்த சதீஷை (23) தேடி வருகிறோம் என்றார்.