ஸ்மார்ட் கார்டு மூலம் தினமும் 20 லிட்டர் மினரல் வாட்டர்: சென்னையில் ஏழைகளுக்காக அம்மா குடிநீர் திட்டம்

ஸ்மார்ட் கார்டு மூலம் தினமும் 20 லிட்டர் மினரல் வாட்டர்: சென்னையில் ஏழைகளுக்காக அம்மா குடிநீர் திட்டம்
Updated on
1 min read

பெருநகர சென்னை மாநகராட்சியில், ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் 100 தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இத் திட்டத்துக்கு 'அம்மா குடிநீர் திட்டம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சென்னை நகரில் வசதி படைத்தோர், 'மினரல் வாட்டர்' என்று பொதுவாக சொல்லப்படும் எதிர்மறை சவ்வூடு பரவுதல், அதாவது ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்த குடிநீரை தாங்களும் வாங்கிப் பருக வேண்டும் என்பது ஏழை எளிய மக்களின் விருப்பமாகும். இதனை நிறைவேற்றும் வகையில், 'அம்மா குடிநீர் திட்டம்' என்ற ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில், ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் 100 தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களில் எதிர்மறை சவ்வூடு பரவுதல் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும்.

இவை ஒவ்வொன்றும் மணிக்கு 2,000 லிட்டர் நீர் சுத்திகரிப்புத் திறன் கொண்டதாக இருக்கும். தேவைக்கேற்ப இதன் செயல்திறன் அதிகரிக்கப்படும்.

இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆய்வகங்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டு அதன் தரம் உறுதி செய்யப்படும்.

பொதுமக்களுக்கு விலை ஏதுமின்றி இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடும்பம் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 20 லிட்டர் என்ற அளவில் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் ஏழை எளிய மக்கள் குடிநீர் சுத்திகரிப்பு தானியங்கி நிலையத்திலிருந்து எளிதில் குடிநீர் பெறும் வகையில் ஸ்மார்ட் கார்டு (SMART CARD) வழங்கப்படும்.

அரசின் இந்த நடவடிக்கை, ஏழை எளிய மக்களும் மினரல் வாட்டர் என சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெற வழிவகுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in