Published : 16 Jul 2021 03:13 AM
Last Updated : 16 Jul 2021 03:13 AM

கல்லணைக் கால்வாயிலிருந்து 2 வாய்க்கால்களுக்கு குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்ல ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால்களுக்கு கல்லணைக் கால்வாயிலிருந்து குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்வது சாத்தியமா? என்பது குறித்து நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.

கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் கட் டளை மேட்டு வாய்க்கால் மூலம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த பொய்கைகுடி ஏரி, செங்கிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட 67 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

அதேபோல, திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை காவிரி ஆற்றிலிருந்து பிரியும் உய்யக்கொண்டான் வாய்க்கால் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை ஏரி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 17 ஏரிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த வாய்க்கால் மூலம் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள் சாகுபடி வசதி பெறுகின்றன. இந்த இரண்டு வாய்க்கால்களிலும் வரும் தண்ணீர், தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி, பூதலூர் பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வந்து சேருவதில்லை. வரும் தண்ணீரும் போதுமான அளவுக்கு இருப்பதில்லை.

இதனால், பல ஆண்டுகளாக விவசாய பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ள முடியாமல் இப்பகுதி விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த இரு வாய்க்கால்களுக்கும் கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆகியோர் நேற்று உய்யக்கொண்டான், கட்டளை மேட்டு வாய்க்கால்கள் உள்ள பகுதிகள், ஆச்சாம்பட்டி அய்யனார் அணைக்கட்டு, வாழவந்தான்கோட்டை ஏரி, பொய்கைகுடி ஏரி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து குழாய் பதித்து தண்ணீர் எடுத்து வழங்கினால், பூதலூர் வட்டாரத்தில் 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும், அதேநேரத்தில் ஏரி, குளங்களிலும் நீர் நிரம்பினால், குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, உய்யக்கொண்டான் நீட்டிப்பு, கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு கல்லணைக் கால்வாயிலிருந்து குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என ஆட்சியர், விவசாயிகளிடம் தெரிவித்தார்.

ஆய்வின்போது, திமுக ஒன்றியச் செயலாளர்கள் கல்லணை செல்லக்கண்ணு, சு.முருகானந்தம் மற்றும் தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், விவசாய சங்க பிரதிநிதிகள் வெ.ஜீவக்குமார், ரா.ராமச்சந்திரன், டி.குணா, ரா.நந்தக்குமார், வெ.கண்ணன், தென்னவன், முருகானந்தம், ஆச்சாம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சு.லதா சுப்பிரமணியன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x