

மலைவாழ் மக்களான காணி இனத்தவர் விளைவிக்கும் மற்றும் சேகரிக்கும் பொருட்களுக்கான விற்பனைக் கூடம் திருநெல்வேலியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கு ஆர்கானிக் சான்று பெறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார த்தில் பாபநாசம், மயிலாறு, இஞ்சிகுழி, அகஸ்தியர் மலை, சேர் வலாறு ஆகிய வனப்பகுதிகளில் ஏறத்தாழ காணி இனத்தை சேர்ந்த 350 பேர் குடியிருந்து வருகின்றனர். காடுகளில் கிடைக்கும் எலுமிச்சை, தேன் ,நெல்லிக்காய் ,மிளகு ,காட்டுப்புளி, கடுக்காய் ,அத்திப்பழம் மற்றும் சில பச்சிலை மூலிகைகளை சேகரித்து மலையடிவாரத்தில் விற்பனைக்காக இவர்கள் கொண்டு வருகிறார்கள்.
இதற்காக பாபநாசம் வனப்பகுதியில் இவர்களது விற்பனைக்கூடம் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பாதிப்பு காரணமாக வனப் பகுதிகளுக்குள் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் சென்றுவர அனுமதிக்கப்படவில்லை. இதனால் காணியின மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இயற்கையாக, எந்தவிதமான ரசாயனப் பொருட்கள் கலக்காமல் கிடைக்கும் இந்த பொருட்களை விற்பனை செய்வதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியது.
இதை தொடர்ந்து காணி இன மக்களின் 40 வகையான உணவு, மூலிகைப் பொருட்கள், விளைபொருட்கள் கோவையில் உள்ள தமிழ்நாடு ஆர்கானிக் சான்றளிப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 40 வகையான பொருட்களுக்கும் ஆர்கானிக் சான்று கிடைத்தது.
இந்நிலையில் இந்த பொருட்களை விற்பதற்காக திருநெல்வேலி வேய்ந்தான்குளம் பகுதியிலுள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் கிராப்ட் என்னும் பெயரில் விற்பனைக் கூடம் நேற்று திறக்கப்பட்டது. பொருட்களை மலைப்பகுதியில் இருந்து கொண்டு வருவதற்கு ரூ.7.5 லட்சத்தில் வாகன வசதியையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
இது தொடர்பாக காணி இன மக்களின் தலைவர் வேல்சாமி, செயலாளர் கணேசமூர்த்தி ஆகியோர் கூறும்போது, ‘‘திருநெல் வேலி மாவட்டத்தில் 3 இடங்களில் இதுபோல் விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்கானிக் சான்றிதழ் கிடைக்கப்பெற்ற பின்பு பல்வேறு மக்கள் தொடர்பு கொண்டு, எங்களது விளைபொருட்களை வாங்க வருகிறார்கள்.
வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு விற்பனை கூடங்களும், இதற்கான மொபைல் செயலிகளும் அமைத்து கொடுத்துள்ளதால் வாழ்வாதாரம் காக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.