

ஊரடங்கால் செங்கம் உழவர் சந்தை திறக்கப்படாமல் மூடி இருப் பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உழவர் சந்தை உள்ளது. இங்கு, காய்கறி விற்பனை செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். செங்கத்தை சுற்றியுள்ள குப்பநத்தம், வலசை, கொட்டாவூர், ஆண்டிப்பட்டி, அரசம்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளையும் கீரை, பப்பாளி, கொய்யா, கத்திரி, வெண்டை, வாழை, பூசணி உள்ளிட்ட காய்கறிகளை தினசரி விற்பனை செய்து வருகின்றனர். செங்கம் நகர மக்களுக்கும் பயனடைந்து வந்தனர்.
இதற்கிடையில், கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் உழவர் சந்தை மூடப்பட்டது. போக்குவரத்து வசதியும் இல்லாததால் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை இருந்தது.
ஊரடங்கு படிப்படியாக தளர்த் தப்பட்ட நிலையில் விவசாயிகள் சிலர் மட்டும் உழவர் சந்தைக்கு அருகே தங்களது விளை பொருட்களை விற்றுச் செல்கின்றனர். பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்ட நிலையில், சந்தைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், மூடப்பட்டுள்ள உழவர் சந்தைகளையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, ‘‘கிராமத்தில் விளையும் காய்கறிகளை அதிக லாபம் இல்லாமல் குறைந்த விலைக்கு விற்கிறோம். ஊரடங்கால் எங்களால் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் திணறி வருகிறோம். தக்காளி, கத்திரி, வெண்டை போன்ற காய்கறிகள் தோட்டத்திலேயே வீணாக அழுகிவருகிறது. ஒரு சிலர் மட்டும் சாலையோரங்களில் விற்றுச் செல்கின்றனர். அங்கு ஏற்கெனவே வியாபாரம் செய்து வரும் நடைபாதை வியாபாரிகளால் நாங்கள் வியாபாரம் செய்ய முடியவில்லை.
பிற சந்தைகளைப் போல் உழவர் சந்தைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் கரோனா விதிகளை பின்பற்றும் வகையில் அரசு அல்லது தனியார் பள்ளி, கல்லூரி வளாகங்களில் எங்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். பிற மாவட்டங்களில் உழவர் சந்தைகள் மாற்று ஏற்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.
ஊரடங்கு காலத்தில் நாங்கள் வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதால் விவசாயிகளின் கோரிக் கையை மாவட்ட நிர்வாகம் ஏற்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.