

அமிர்தி வனப்பகுதியில் பெய்த கன மழையால் நாகநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம் மீண்டும் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை தாக்கத்தால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஓடை, கானாறு, ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி நள்ளிரவு பெய்த கன மழையால் அமிர்தி வனப்பகுதியில் அதிகப்படியான மழை பெய்தது.
அமிர்தி சிறு வன உயிரியல் பூங்காவுக்கு அருகேயுள்ள நாகநதி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட தரைப் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, ஆற்றின் குறுக்கே ராட்சத சிமென்ட் குழாய்கள் அமைக்கப்பட்டு தற்கா லிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலத்தின் வழியாக பலாம்பட்டு, நம்மியம்பட்டு மற்றும் ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட மலை கிராம மக்கள் வேலூருக்கு வந்து சென்றனர்.
இதற்கிடையில், கனமழை காரணமாக நாகநதி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தற்காலிக தரைப் பாலம் முற்றிலும் சேதமடைந்து அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மலை கிராம மக்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது. மேலும், வனத்துறை அலுவலர்களும் நாகநதி ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் தற்காலிக பாலம் மீண்டும் சீரமைக்கும் பணி நடைபெற்றது.
தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்ட அதே இடத்தில் மீண்டும் குழாய்கள் பதிக்கப்பட்டு இரண்டு பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கி தரைப்பாலம் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக பொதுமக்கள் வந்து செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையின் காரணமாக அமிர்தியில் உள்ள சிறிய அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. வனப்பகுதியின் தட்பவெப்ப நிலை மாறியுள்ளதால் அருவி பகுதிக்குச் செல்ல தடை விதிக் கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் யாரும் அமிர்திக்கு வரவேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.