

நள்ளிரவில் எழுப்பிக் கேட்டாலும் எம்ஜிஆருக்கு ஓட்டு போடும் நீங்கள், எங்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என அரசு விழாவில் அமைச்சர் காந்தியின் பேச்சால் கலகலப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வன்னிவேடு ஊராட்சியில் உள்ள நரிக்குறவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு கேட்டு மனு அளித்தனர். இதில், 20 பேருக்கு குடும்ப அட்டை மற்றும் முதியோர் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, ‘‘நீங்கள் கோரிக்கை வைத்த 4 நாளில் நிறைவேற்றி இருக்கிறேன். என் வீட்டுக்கு வந்தபோது உங்களுக்கு தேநீர், காபி கொடுத்து வரவேற்றேன். உங்களை தேடி வந்து உங்களுக்கான உதவியை கொடுக்கிறேன். ஆனால், தேர்தல் என்று வந்துவிட்டால் நடு ராத்திரியில் உங்களை எழுப்பிக் கேட்டாலும் எம்ஜிஆருக்கு ஓட்டு போடுகிறேன் என்று கூறுகிறீர்கள்.
உங்கள் கோரிக்கையை நாங்கள் தான் நிறைவேற்றுகிறோம். எங்களுக்கும் நீங்கள் ஓட்டு போட வேண்டும்’’ என்றார். இதைக்கேட்ட நரிக்குறவர்கள் பலமாக கைகளை தட்டினர். நலத்திட்ட உதவிகளை பெற்ற நரிக்குறவர்கள் அமைச்சருடன் நின்று மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.