Last Updated : 15 Jul, 2021 07:55 PM

 

Published : 15 Jul 2021 07:55 PM
Last Updated : 15 Jul 2021 07:55 PM

ஆம்பூர் அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் ஆர்மா மலை: மீட்டெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆம்பூர் அருகே சமூக விரோதிகளின் கூடாரமாகவும், கால்நடைகளின் புகலிடமாகவும் மாறியுள்ள பழமை வாய்ந்த ‘ஆர்மா மலையை’ மீட்டுச் சுற்றுலாத் தலமாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல ஏக்கர் பரப்பில் முற்றிலும் பாறைகளால் ஆன ‘ஆர்மா மலை’ உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 750 அடி உயரத்தில் ஆர்மா மலை அமைந்துள்ளது. இங்கு மூலிகைத் தாவரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

ஆர்மா மலையின் தெற்குப் பகுதியில் பல்வேறு நினைவுச் சின்னங்கள் அடங்கிய குகை ஒன்று அமைந்துள்ளது. இந்தக் குகையின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட வண்ணக்கலவைகளால் ஆன சிறப்பு மிக்க ஓவியங்கள், காண்போரை வியக்க வைத்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலில் உள்ளதைப் போன்ற அரிய ஓவியங்கள் இங்கு காணப்பட்டன.

இந்தக் குகையின் உள்ளே பல்வேறு அறைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த அறைகள் சுடப்படாத செங்கற்களைக் கொண்டு கட்டி, சுவர் எழுப்பப்பட்டுள்ளன. இங்குள்ள சுவர்களில் காக்கும் தெய்வங்களை வழிபடப் பாறைகளில் புடைப்புச் சிற்பங்களை வடிவமைத்து அதை மக்கள் வணங்கியும் வந்துள்ளனர். இம்மலையின் கீழ்ப்பகுதியில் இருந்து மேலே குகைக்குச் செல்ல 250-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ள இப்படிக்கட்டுகளைச் சுற்றியும் பச்சைப் பசேல் எனத் தாவரங்கள் அடர்ந்து ரம்மியமாகக் காட்சியளிக்கின்றன.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஆர்மா மலை உரிய பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், கால்நடைகளில் புகலிடமாக மாறி வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆர்மா மலையில் உள்ள பாறைகளில் வரையப்பட்டுள்ள வண்ணக்கலவை ஓவியங்கள் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள பாறைகளில் வடிவமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்துச் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘பழமை வாய்ந்த ஆர்மா மலையானது தற்போது கால்நடைகளுக்குப் புகலிடமாக மாறிவிட்டது. மலையின் கீழ்ப் பகுதியில் வசிப்போர் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வந்து மலையைச் சுற்றியுள்ள தாவரங்களை உணவாக வழங்கிவிட்டு ஆர்மா மலையில் உள்ள குகைகளில் ஓய்வெடுக்கின்றனர். ஒரு சிலர் குகையின் உள்ளேயே ஆடுகளைக் கட்டிவைத்து அங்கேயே தீவனம் வழங்கி ஆடுகளைப் பராமரிக்கின்றனர். இதனால், ஆர்மா மலை தன் அடையாளத்தை இழந்து வருகிறது.

சில சமூக விரோதிகள் இங்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் வந்து சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வருவதுடன், பழமை வாய்ந்த மலையையும், அங்குள்ள குகை பாறைகளையும் சேதப்படுத்தி வருகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர்களும் இங்கே தங்களது சாராயத் தொழிலை விரிவுபடுத்தி வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டைகள், குகைகள், கட்டிடங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதைப் போல, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், ஆம்பூரில் உள்ள பழமை வாய்ந்த ஆர்மா மலையை மீட்டெடுத்து அதைப் புனரமைத்துச் சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x