Published : 15 Jul 2021 06:48 PM
Last Updated : 15 Jul 2021 06:48 PM

நீட் தேர்வை 12 மணி நேரத்தில் இல்லாமல் செய்வோம் என்று நாங்கள் எங்கும் சொல்லவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை

''நீட் தேர்வை 12 மணி நேரத்தில் இல்லாமல் செய்வோம் என்று நாங்கள் எங்கும் சொல்லவில்லை. மாணவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். பயிற்சி பெறுகிறார்கள். பட்ஜெட் கூட்டம் வரை பாருங்கள்'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

டெல்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்தித்தபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

நீட் விவகாரத்தில் 13க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பல கட்டங்களாக நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லியும் எதுவும் நடக்கவில்லை. தற்போது நீங்கள் பேசியதில் அமைச்சர் உறுதி அளித்தாரா?

மத்திய அமைச்சர் அதில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார். அவரும் உண்மையை உணர்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்றால், தற்போது அவரவர் மாநிலங்களில் தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கிறோம்.

மலையாளம் போன்ற புதிய மொழிகளை இணைத்துள்ளோம் என்று சொன்னார். தேர்வு மையங்களை அதிகரித்திருப்பதாகச் சொன்னார். அதில் எல்லாம் எங்களுக்குக் குறையில்லை. ஆனால், எங்களுக்குத் தேர்வே வேண்டாம் என்பதுதான் கோரிக்கை என்று எடுத்துச் சொன்னோம். ஏனென்றால் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாடத்திட்டப் பிரச்சினை எல்லாம் இருக்கிறது என்று எடுத்துச் சொன்னோம்.

அவரும் அதை உணர்ந்திருக்கிறார். அவர் சார்ந்த மாநிலத்திலும் இதுபோன்ற பிரச்சினை இருப்பதை எடுத்துச் சொன்னார். ஒடிசாவிலும் கூட இதுபோன்றதொரு நிலைமை உள்ளது என்று சொன்னார். நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதைத் தாண்டி தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

அந்த நம்பிக்கையில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம். சிலர் நீங்கள் வந்தவுடன் 12 மணி நேரத்தில் நீட் தேர்வே இல்லாமல் செய்துவிடுவோம் என்று சொன்னீர்களே என்பதுபோல் சொல்லி வருகின்றனர். ஆனால், உண்மையில் என்ன சொன்னோம் என்றால் மாநில அளவிலான தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னவென்றால், நாங்கள் முதல் கூட்டத்தொடரில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்போம் என்றுதான் சொல்லியிருந்தோம்.

இன்னும் முதல் கூட்டத்தொடர் இன்னும் முடியவில்லை. பட்ஜெட் முடிந்தால்தான் முதல் கூட்டத்தொடர் முடியும். அதற்குள் தீர்மானம் வருகிறதா? என்றுதான் பார்க்கவேண்டும். அதுவுமல்லாமல் அதற்கும் முன்னரே நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க ஏற்பாடு, அதற்குள் பாஜக நிர்வாகியின் நீதிமன்ற வழக்கு குறுக்கீடு, நீதிமன்றத் தடை நீங்கியவுடன் நேற்று நீதிபதி குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இப்படி மிக வேக வேகமாகப் பல விஷயங்கள் நடந்து வருகின்றன. நிச்சயம் இந்த மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் முயற்சி எடுத்து வருகிறார்.

நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியில் என்ன சொல்லியிருக்கிறார்?

அவர் நேற்று அறிக்கை அளித்த பின்னர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். 86,000 பேர் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதில் பெரும்பாலும் நீட் வேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அதையே அமைச்சரிடமும் நாங்கள் சொன்னோம்”.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x