

தென்மேற்குப் பருவக் காற்றின் தீவிரம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் இடைவிடாத தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, மஞ்சூர், கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. ஓவேலி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி ஆகிய பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்து வருவதால், உதகையில் கடுமையான குளிர் நிலவுகிறது. காற்றின் வேகம் காரணமாக ஒருசில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. பல கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையில் விழுந்துள்ள மரங்களை தீயணைப்புத் துறையினர் உடனுக்குடன் வெட்டி, அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட வாளவயல், பில்லுக்கடை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவை நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அகற்றி, சாலையைச் சீரமைத்தனர். மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருப்பதாகத் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி கூறும்போது, ‘மழை பாதிப்புகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்கிறோம். மழை தீவிரமடையும்பட்சத்தில் அனைத்துத் தீயணைப்பு வீரர்களையும் அவசர காலங்களில் உடனடியாக மீட்புப் பணிகளுக்குச் செல்லும் வகையில் 24 மணி நேரமும் தயார்நிலையில் வைத்திருக்கிறோம். தீயணைப்பு வாகனங்கள், மரம் அறுக்கக்கூடிய இயந்திர வாள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் சரிபார்க்கப்பட்டு பயன்படுத்துவதற்கு ஏதுவாக வைக்கப்பட்டுள்ளன.
வெள்ள பாதிப்புகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக மூன்று நவீனப் படகுகள் தயார் நிலையில் உள்ளன. ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டால், மீட்புப் பணிகள் தொய்வின்றி நடக்க வசதியாக பிற மாவட்டங்களிலிருந்து கூடுதலாக தீயணைப்பு, மீட்புக்குழுக்கள் வரவழைக்கப்படும். தேவைப்பட்டால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற குழுவும் சென்னையிலிருந்து வரவழைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அவலாஞ்சியில் 100 மி.மீ. மழை பதிவானது. அப்பர் பவானியில் 73, கிளின்மார்கனில் 64, பந்தலூரில் 61.1, நடுவட்டத்தில் 41, சேரங்கோட்டில் 36, தேவாலாவில் 23, எமரால்ட்டில் 22, பாடந்துறையில் 21, செருமுள்ளியில் 16, கோடநாட்டில் 14, குந்தாவில் 13, ஓவேலியில் 12, உதகையில் 9,மி.மீ. மழை பதிவானது.