Published : 15 Jul 2021 05:25 PM
Last Updated : 15 Jul 2021 05:25 PM

காவல்துறையில் திமுகவினரின் தலையீடு; பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும்: ஓபிஎஸ்

ஓபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

காவல் துறையினரை மிரட்டிய திருச்சி மாவட்டம், மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூலை 15) வெளியிட்ட அறிக்கை:

"ஆட்சி அதிகாரத்தில் கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது என்று வலியுறுத்தியவர் அண்ணா. ஆனால், இன்று எல்லா மட்டத்திலும் திமுகவினரின் தலையீடு தலைவிரித்து ஆடுகிறது.

சில நாட்களுக்கு முன்பு திமுகவினர் சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று, தாங்கள் சொல்லும் நபர்களை களப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டியதை நான் எனது அறிக்கையின் வாயிலாக சுட்டிக்காட்டினேன்.

இதையடுத்து, அதுபோல் நடைபெறாது என்ற உறுதிமொழியினை தமிழக முதல்வர் சென்னை மாநகராட்சி ஆணையர் வாயிலாக அளித்தார். இதனையடுத்து, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், தடுப்பூசி முகாம்களிலும், நியாயவிலைக் கடைகளில் டோக்கன் விநியோகிப்பதிலும், திமுகவினரின் தலையீடு தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது முதல்வரின் வசமிருக்கும் காவல் துறைக்கும் சென்றிருக்கிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்துவதாக காவல் துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, தனிப்படை அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதாகவும், அப்போது மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், அவற்றின் ஓட்டுநர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அந்த வாகனங்கள் மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமிக்கு சொந்தமானவை என்று தெரியவந்துள்ளது.

அவர் கொடுத்த அழுத்தம் காரணமாக, மூன்று ஓட்டுநர்களை காவல் துறையினர் விடுவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து, மூன்று ஓட்டுநர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் காவல் துறையிடம் மீண்டும் ஒப்படைப்பது தொடர்பாக, மணப்பாறை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமி வீட்டுக்குச் சென்று நான்கு மணி நேரம் பேசியதாகவும், ஸ்ரீரங்கல் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டியும் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், கடைசியாக இரண்டு பழைய வாகனங்களை ஒப்படைக்க சம்மதித்ததாகவும், ஓட்டுநர்களை கடைசி வரை ஒப்படைக்கவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே கீழத்தானியம் பகுதி கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர், மணல் கடத்தி வந்த லாரியை பிடிக்க முயற்சித்தபோது, லாரி ஏற்றி அவர்களை கொல்ல முயன்றதாகவும்,அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பிவிட்டதாகவும், இருப்பினும், லாரியிலிருந்து மூவர் இறங்கி வந்து அவர்களைத் தாக்கியதாகவும், இந்த மூவரில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இருவர் தலைமறைவாகி விட்டதாகவும், இன்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதுபோன்ற மணல் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

சட்டம் - ஒழுங்கை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினரை மிரட்டுவதும், வருவாய்த்துறை அதிகாரிகளை கொலை செய்ய முயற்சிப்பதும் கடும் கண்டனத்துக்குரியது. இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வாய்ப்பு உருவாகும்.

எனவே, முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, காவல் துறையினரை மிரட்டிய திருச்சி மாவட்டம், மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமி மீதும், புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளை கொல்ல முயற்சித்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு, இதுபோன்ற உரிய மணல் கடத்தல் சம்பவங்கள் இனி நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x