

40 ஆண்டுகளுக்குப் பிறகு, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற சரவணப் பொய்கை குளம் ‘ஏரியேசன்’ (Nano air bubbles technology) தொழில்நுட்பத்தில் நிரந்தரமாகச் சுத்தம் செய்யப்பட உள்ளது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் உள்ள சரவணப் பொய்கை குளம், சிறப்பு வாய்ந்தது. 12 அடி ஆழம் கொண்ட இந்தக் குளம் 5.5 ஏக்கரில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு நாள்தோறும் இந்த சரவணப் பொய்கை குளத்தில் இருந்து யானை மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். அங்கு வரும் பக்தர்கள், குளத்தில் புனித நீராடிய பின்புதான் கோயிலுக்குள் தரிசனம் செய்வார்கள்.
தைப்பூசம் போன்ற ஆண்டின் விசேஷ நாட்களில் இந்தக் குளத்தில் பக்தர்கள் அதிக அளவு புனித நீராடத் திரள்வார்கள். பூஜை செய்வார்கள். தியானம் செய்வார்கள். மற்ற நாட்களில் உள்ளூர் மக்கள், இந்தக் குளத்தில் துணிகளைத் துவைக்கின்றனர். சிலர் இங்கு குளிக்கவும், கை கால்களைக் கழுவவும் செய்கிறார்கள். அதனால், இந்தக் குளம் மாசு அடைந்து சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது.
அதனால், கடந்த சில ஆண்டுகளாக வெளியூர்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இடமில்லாது சிரமப்படுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்தக் குளத்தில் உள்ள மீன்கள் அடிக்கடி இறந்து மிதக்கும் அளவிற்கு, குளத்தின் நீர் மாசடைந்தது. அதனால், இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீராடவும், பூஜை மற்றும் தியானம் செய்யவும் சுத்தமான நீர் இல்லாமல் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் உள்ளூர் மக்கள் குளத்தில் குளிக்கவும், துணி துவைப்பதையும் தவிர்க்க, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், குளத்தின் அருகிலேயே விருதுநகர் எம்.பி. மாணிக் தாக்கூர் நிதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் துணி துவைக்கச் சலவைக் கூடம், கழிப்பிடம் மற்றும் குளியல் அறைகளைக் கட்டியுள்ளனர். ஆனால், இது மட்டுமே நிரந்தரத் தீர்வாக இல்லாத நிலையில் அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, குளத்தில் உள்ள தண்ணீரை நிரந்தரமாக ஏரியேசன் (Nano air bubble technology) தொழில்நுட்பத்தில் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளத் திட்டமொன்றை வடிவமைத்துள்ளார்.
இந்தத் திட்டத்தை ஆட்சியர் அனீஸ் சேகரிடம் வழங்கியுள்ளார். ஆட்சியர் அனீஸ் சேகர், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து சமீபத்தில் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை குளத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார். தற்போது இதற்கான திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விவரங்களை மாவட்ட நிர்வாகம் தயார் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கூறியதாவது:
’’இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் உள்ள குளங்களில் பக்தர்கள் நீராடவும், பூஜைகள் மேற்கொள்ளவும் அங்குள்ள புனிதக் குளங்களை நிரந்தரமாகச் சுத்தமாக வைத்துக்கொள்ளவும், தொழில்நுட்பங்களை வைத்து என்ன செய்ய முடியும் என்று கேட்டிருந்தனர். அந்த அடிப்படையில் ஏரியேசன் தொழில்நுட்பத்தில் முதற்கட்டமாகத் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை குளத்தைச் சுத்தப்படுத்த ஏற்பாடுகள் நடக்கின்றன.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குளத்தின் தண்ணீர் எந்த அளவுக்கு மாசு அடைந்துள்ளது என்பதை ஆய்வு செய்தோம். அதிர்ஷ்டவசமாக அபாயகரமான ரசாயனக் கழிவுகள், சாக்கடை நீர் எதுவும் குளத்தில் கலக்கவில்லை. துணிகளைத் துவைப்பதால் உருவாகும் ரசாயனக் கழிவு கலந்து, ஆக்சிஜன் அளவு குறைந்ததாலேயே குளத்தின் தண்ணீர் மாசடைந்துள்ளது. அதனாலே, மீன்கள் இறந்து மிதந்துள்ளன. ஆக்சிஜனேற்றம் செய்தாலே குளத்தைத் தூய்மை செய்துவிடாலம்.
ஆனால், ஒரு முறை ஆக்சிஜனேற்றம் செய்துவிட்டு அப்படியே விட்டுவிட்டால் மீண்டும் குளத்தின் தண்ணீர் மாசு அடைய வாய்ப்புள்ளது. அதனால், மீன் தொட்டியில் எப்படி மீன்கள் வாழ்வதற்குத் தொடர்ந்து தொட்டித் தண்ணீர் தொடர்ந்து ஆக்சிஜனேற்றம் செய்யப்படுகிறோ, அதே தொழில்நுட்பத்தை இந்தக் குளத்தில் மேற்கொள்ளப் போகிறோம்.
சரவணப் பொய்கை குளத்தின் ஆதாரம் மழை நீர் மட்டுமே. மழைக் காலத்தில் பெய்யும் நீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஓடுகிற நீர் கிடையாது. அதனால், குளத்தின் தண்ணீரைத் தொடர்ச்சியாக ஆக்சிஜனேற்றம் செய்தால் மட்டுமே குளத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். இந்தத் தொழில்நுட்பத்தில் தண்ணீரைச் சுத்தப்படுத்தினால் குளத்தின் மேலிருந்து பார்த்தால் அடிப்பகுதி தெளிவாகத் தெரியும்’’.
இவ்வாறு அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தெரிவித்தார்.