

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை ட்ரோன் மூலமும், ஜிபிஎஸ் மூலமும் படங்கள் எடுப்பதுடன், நேரடியாக அளவீடு செய்தும், நீர்நிலைகளின் அளவுகளைத் துல்லியமாகப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 112 கோடி ரூபாய் செலவில் பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் கான்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்துக்குத் தடை கோரி, இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச்சங்கம் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, பஞ்சாயத்து மற்றும் தாலுக்கா அளவிலான நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும் நடைமுறையை மேற்கொள்ளுமாறு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செயற்கைக்கோள் புகைப்படங்கள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் கூறி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மட்டும் நீர்நிலைகளைத் துல்லியமாகக் குறிப்பிட முடியாது எனவும், மாறாக ஜிபிஎஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஈரோடு பெரும்பள்ள ஓடை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டதில் பெரும்பாலானவர்கள் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும், இது மழைநீர் வடிகால் எனவும், தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
ஆனால், நீர்ப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை ட்ரோன் மூலமும், ஜிபிஎஸ் மூலமும் படங்கள் எடுப்பதுடன், நேரடியாக அளவீடு செய்தும், நீர்நிலைகளின் அளவுகளைத் துல்லியமாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இவை எதிர்காலப் பயன்பாட்டுக்குப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அழகுபடுத்தும் பெயரில் இயற்கை நீரோட்டத்துக்கு இடையூறாக எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
ஈரோடு பெரும்பள்ள ஓடையில் கட்டுமானப் பணிகள் குறித்து வரும் செவ்வாய்க் கிழமை (ஜூலை 20) அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர்.