Published : 15 Jul 2021 02:00 PM
Last Updated : 15 Jul 2021 02:00 PM

9 அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், 202 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அரசு அழைப்பு

சென்னை

9 அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 202 வழக்கறிஞர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உரிய தகுதியுள்ள வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசு வழக்குகளில் ஆஜராவதற்காக தற்காலிக அடிப்படையில் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேற்று பிறப்பித்துள்ள அரசாணையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 7 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், மதுரை கிளைக்கு 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், சென்னை மற்றும் மதுரைக்கு தலா ஒரு அரசு பிளீடர் போன்ற நியமனங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், 33 அரசு சிறப்பு வழக்கறிஞர் மற்றும் 55 அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 191 அரசு வழக்கறிஞர்களுக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டுள்ளன. பதவிகளுக்கு ஏற்ப 10 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவமுள்ள வழக்கறிஞர் தமிழக அரசு இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, ஜூலை 29ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் பொதுத்துறைக்குப் பதிவு தபாலில் அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுயவிவரக் குறிப்பு மற்றும் ஆவணங்களுடன், 25 ஆண்டுகள் அனுபவமுடைய மூத்த வழக்கறிஞரிடமோ அல்லது சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் சங்கத்திடமோ அனுபவம் குறித்த கடிதத்தைப் பெற்றுச் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x