Published : 15 Jul 2021 11:48 AM
Last Updated : 15 Jul 2021 11:48 AM

நீங்கள்தான் உண்மையான உலக நாயகர்கள்: ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுடன் உரையாடிய கமல்

காணொலிக் காட்சி மூலம் விளையாட்டு வீரர்களுடன் உரையாடிய கமல்ஹாசன்.

சென்னை

"நீங்கள்தான் உண்மையான உலக நாயகர்கள்" என, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடன் உரையாடிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை கமல்ஹாசன் நேற்று (ஜூலை 15) காணொலிக் காட்சி மூலம் தொடர்புகொண்டு, அவர்கள் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தார். தடகள வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோருடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், "வறுமையின் பிடியில் இருந்தபோதும் சாதனையாளர்களாகத் திகழும் நீங்கள், உண்மையான 'உலக நாயகர்கள்'. இந்தியாவை உலகமே திரும்பிப் பார்க்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். ஒரு பெரிய பேரரசு கூட 500 வருடத்துக்கு மேல் கிடையாது. ஏழ்மையும் அப்படித்தான். ஒரு திறமைசாலி நினைத்தால் ஏழ்மையை ஓட ஓட விரட்ட முடியும்.

இந்தியாவின் தங்கச்சுரங்கம் நீங்கள், வெறும் தங்கப் பதக்கம் அல்ல. நீங்கள் கற்றவற்றை மற்றவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். அது நீங்கள் செய்யவேண்டிய கடமை. போட்டியை நிதானமாகப் பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள். உங்கள் மீது நீங்கள் கொண்டுள்ள சுயமரியாதையைப் போலவே, உங்கள் விளையாட்டையும் மரியாதையுடன் எதிர்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றியுடன் திரும்பும்போது உங்களைப் பாராட்ட நாங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x