Published : 15 Jul 2021 10:17 AM
Last Updated : 15 Jul 2021 10:17 AM

பஹ்ரைனில் வீட்டு வேலைக்காகச் சென்ற இடத்தில் இன்னல்கள்: மூன்று பெண்கள் பத்திரமாக மீட்பு

மீட்கப்பட்ட மூன்று பெண்கள்.

சென்னை

பஹ்ரைனில் வீட்டு வேலைக்காகச் சென்ற இடத்தில், பல இன்னல்களுக்கு ஆளான தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மீட்கப்பட்டனர்.

வள்ளி, வடிவுக்கரசி, வேளாங்கண்ணி ஆகிய 3 பெண்கள், கடந்த பிப்ரவரி மாதம் முகவர்கள் மூலமாக பஹ்ரைனுக்கு வீட்டு வேலைக்காகச் சென்றனர். வீட்டு வேலைக்குச் சென்ற இடத்தில், வேலைக்கு அமர்த்தியவர்கள் மூலம் மூவரும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளானதாகத் தெரிகிறது. உணவு கொடுக்காமல் மூவரையும் அடைத்து வைத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, இவர்களில் ஒருவர் வெளியிட்ட வாட்ஸ் அப் காணொலி, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த சமூகவியலாளரும் ஏ.ஐ.எம்.எஸ் பொதுச் செயலாளருமான கன்யா பாபுவின் முயற்சியால் பஹ்ரைனில் இயங்கி வரும் இந்தியத் தூதரகத்துக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பஹ்ரைன் வெளிநாட்டவர் சட்ட மையத்தின் தலைவர் சுதிர் திருநிலத் முயற்சியால், பஹ்ரைனில் சமூக சேவையாற்றிவரும் அன்னை தமிழ் மன்றம், ஐ.சி.ஆர் எஃப் எனும் அமைப்பின் உதவியோடு, இந்த மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டு தகுந்த பாதுகாப்போடு தங்க வைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, இந்தியத் தூதரகத்தின் தூதுவர் பியூஷ் ஸ்ரீவத்ஸவா, இதர தமிழ் அமைப்புகளின் உதவியால் மூன்று பெண்களும் இன்று (ஜூலை 15) பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்குரிய பயணச் செலவை இந்தியத் தூதரகம் பொறுப்பேற்றுக் கொண்டது. இவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அன்னைத் தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் பொறுப்பேற்று வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x