Last Updated : 15 Jul, 2021 03:13 AM

 

Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM

நாளை உலக பாம்புகள் தினம்: 5 ஆயிரம் பாம்புகளை மீட்ட கடையநல்லூர் இளைஞர்

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ராஜநாகத்தை லாவகமாகப் பிடித்த ஷேக் உசேன்.

தென்காசி

பாம்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் ஜூலை 16-ம் தேதி உலக பாம்புகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தென்காசி மாவட்ட கிராமங்களில் வீடுகளுக்குள் பாம்பு புகுந்துவிட்டால், கடையநல்லூரைச் சேர்ந்த ரா.ஷேக்உசேனை (26) அழைக்கின்றனர். அவர், லாவகமாக பாம்பைப் பிடித்து காட்டில் விட்டு விடுகிறார். விலங்கியல் பட்டம் படித்துள்ள ஷேக் உசேன், இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை உயிருடன் மீட்டுள்ளார்.

இதுகுறித்து ஷேக் உசேன் கூறியதாவது: பாம்புகள் மனிதனுக்கு தீங்கு செய்வதில்லை. நன்மையே செய்கின்றன. ஒரு பாம்பு ஆண்டுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் எலிகளைப் பிடித்து உண்ணும். பாம்புகள் இல்லாவிட்டால் எலிகள் எண்ணிக்கை அதிகரித்துவிடும். விவசாயிகளின் நண்பன் பாம்புகள்.

பள்ளியில் படிக்கும்போதே பாம்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளேன். 20-க்கும் மேற்பட்ட ராஜநாகங்களை மீட்டுள்ளேன்.

வனத் துறை, தீயணைப்புத் துறை ஊழியர்களுக்கு பாம்புகளைக் கையாளும் முறை, எவ்வாறு மீட்பது என்பது குறித்து பயிற்சி அளித்து வருகிறேன். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாம்புகள் மற்றும் பாம்புகடி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இதுவரை500-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.

உலகில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்பு இனங்களும், இந்தியாவில்280-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்களும் உள்ளன. பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. பெரும்பாலான பாம்புகள் விஷமற்றவையே. நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், கருநாகம், ராஜ நாகம் உட்பட 70 வகையான பாம்புகள் மட்டுமே நஞ்சுடையவை.

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

“பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்து உறிவது, நெருப்பு வைப்பது, கத்தியால் கீறிவிடுவது இவை எல்லாமேதவறான முதலுதவிகள். பாம்பு கடித்தஇடத்தில் மஞ்சள் போன்ற பொருட்களையும் பூசக் கூடாது. பாம்பு கடிக்கு உள்ளானவரை படுக்க வைத்தோ, உட்கார வைத்தோ உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.பாம்பு விஷத்தில் 2 வகை உண்டு. ஒன்று, நியூரோடாக்ஸின் (Neurotoxin) என்ற விஷம். இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மிகவும் ஆபத்தானது. ராஜநாகம், நல்ல பாம்பு போன்ற பாம்புகள் கடிப்பதால் இந்த வகை விஷம்உடலில் ஏறும். அரை மணி நேரத்தில்விஷமுறிவு மருந்து கொடுத்துவிட்டால், கடிபட்டவரின் உயிரை காப்பாற்றிவிடலாம்.

மற்றொன்று, ஹீமோடாக்ஸின் (Hemotoxin) என்ற விஷம். இது, ரத்தசெல்களைப் பாதித்து, ரத்த சிவப்பணுக்களை அழித்துவிடும். கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சாரைப் பாம்பு போன்ற பாம்புகள் கடித்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும்” என்றார் ஷேக் உசேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x