

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளை தமிழக முதல்வர் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில், "தமிழக அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 20 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து நான்கு லட்சம் அரசு ஊழியர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் 68 சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன.
2011 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முதல்வர் ஜெயலலிதா நான்கரை ஆண்டு காலத்தில் நிறைவேற்றவில்லை.
முதல்வர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிமானது, அரசுத் துறைகளில் தொகுப்பு ஊதியம், மதிப்பு ஊதியம், சிறப்புக் காலமுறை ஊதியம் போன்றவை ஒழிக்கப்பட்டு, முறையான காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்பதாகும்.
ஆனால், அரசு ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான காலமுறை ஊதியம் என்பதை ஏற்காமல், அரசு ஊழியர்கள் கொத்தடிமைகளாக நீடிக்கும் அவலம் தொடர்கிறது.
தற்போது நடைமுறையிலுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் மற்றொரு முதன்மையான கோரிக்கையாகும். அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று இதனையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. 1.4.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டு, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இதற்கான சந்தாத் தொகையாக ஊதியத்தில் பத்து சதவீதம் என்ற அடிப்படையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. இதில் தமிழக அரசு பத்து சதவீதம் பங்குத் தொகையாக செலுத்த வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாயை அளிக்காமல் ஏமாற்றியது.
தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களில், கடந்த ஜூலை மாதம் வரையில் 3,404 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர். 1,890 பேர் மரணமடைந்துவிட்டனர். பணி ஓய்வு பெற்றவர்களுக்கும், மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்கள் செலுத்திய தொகையைக்கூட இன்று வரை திரும்ப வழங்காததால், அரசு ஊழியர்கள் குடும்பங்கள் நிர்க்கதியாக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் அரசு ஊழியர்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நியாயமான கோரிக்கையை வைத்தனர்.
தமிழகத்தில் பட்டம் பெற்ற ஒரு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். இந்நிலையில், தமிழக அரசில் உள்ள இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பாமல், அரசுத் துறைகளில் ஒப்பந்த நியமன முறை, தொகுப்பு ஊதிய நியமன முறை, அயல்பணி ஒப்பந்த முறைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது ஆகும். மேலும் மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசுத்துறைகள் சீரழிக்கப்படுவதுடன், அரசு ஊழியர்களின் பணிச்சுமையும் அதிகரித்துவிட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தைப் பொறுத்தவரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் 1.1.2011 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தியதில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கைகள் ஆகும்.
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், அலுவலக ஊதவியாளர், அடிப்படைப் பணியாளர் மற்றும் அனைத்துப் பிரிவு ஊழியர்களை பணி வரைமுறைப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளையும் ஜெயலலிதா அரசு நிராகரித்து வருகிறது.
நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல், சாலைப்பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்களை பணியில் அமர்த்தாமல் நான்கரை ஆணடுகளாக ஜெயலலிதா அரசு ஈவு இரக்கமின்றி அலைக்கழித்தது.
அரசு ஊழியர்களைப் போலவே, ஆசிரியர் சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழகஅரசு செவி சாய்க்கவில்லை. அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ பேராசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் தொகுப்பு ஊதியம் ரூ.10 ஆயிரம் என்பதை, பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரையின்படி ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கக் கோரி 3600 கௌரவப் பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியது மட்டுமின்றி, கடந்த நாலரை ஆண்டுகளில் ஒருமுறைகூட அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல், முதல்வர் ஜெயலலிதா அதிகார மமதையுடன் செயல்பட்டதால்தான் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளை தமிழக முதல்வர் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.